மெல்பேர்னில் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஹோட்டலுக்கு முன்பாக வாகனங்களில் இருந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகதிகள் செயற்பட்டாளர்கள் 26 பேருக்கு சுமார் 43 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்ட அதேநேரம் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
மெல்பேர்ன் , Preston-இலுள்ள மந்த்ரா ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள்- உள்ளே கொரோனா பரவும் அச்சம் இருப்பதாகவும், நெருக்கமான சூழலில் வாழும் தமக்கு போதுமான சுகாதார வசதிகள் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்து ஹோட்டலுக்குள் இருந்தபடியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாகவும், குறித்த அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை கொரோனா பரவலிலிருந்து பாதுகாக்கும்வகையில் சமூகத்தில் வாழ அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியும், அகதிகள் செயற்பாட்டாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பதாகைகள்தாங்கிய வாகனங்களில் அமர்ந்தபடி இவர்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர்.
எனினும் அனைவரும் வீட்டில் இருக்கவேண்டும் என்பது உட்பட கொரோனா பரவலைத் தடுப்பதற்கென அரசு நடைமுறைப்படுத்தியுள்ள விதிகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில், குறித்த செயற்பாட்டாளர்களுக்கு 43 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் கருணை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒன்று எனவும் வாகனத்திற்குள் social distance- சமூக இடைவெளி பேணப்பட்டது என்றும் அகதிகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Share
