மெல்பேர்னில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தொடர்பிலான stage 4 கட்டுப்பாடு மேலும் இரண்டுவாரங்களுக்கு நீடிக்கப்படவுள்ளதாக மாநில Premier Daniel Andrews அறிவித்தார்.
தற்போது நடைமுறையிலுள்ள stage 4 கட்டுப்பாடு அடுத்த வாரம் செப்டம்பர் 13 முடிவுக்கு வரும்நிலையில் இது மேலும் இருவாரங்களுக்கு நீடிக்கப்படவேண்டியது அவசியமாவதாக Daniel Andrews தெரிவித்தார்.
எனினும் சில கட்டுப்பாடுகளில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது.இதன்படி எதிர்வரும் செப்டம்பர் 14 முதல்:
- தினமும் இரவு 8pm-5am வரை நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவு 9pm-5am ஆக மாற்றப்பட்டுள்ளது.
- தனியாக இருப்பவர்கள் மற்றும் துணைவர்களைச் சந்திப்பவர்களுக்கு, வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர்களுக்கு வெளியே பயணம் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு பொருந்தாது. ஆனால் அவர்கள் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும்.
- உடற்பயிற்சிக்காக தற்போது ஒரு மணிநேரம் மட்டும் வெளியில் செல்லலாம் என்ற நிலை மாற்றப்பட்டு 2 மணிநேரங்களாக அதிகரிக்கப்படுகிறது.
- வெளியிடங்களில் ஒரே வீட்டிலுள்ளவர்கள் அல்லது இரண்டுபேர் ஒன்றுகூடலாம்.
- விளையாட்டு மைதானங்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
இதன்பின்னர் நிலைமை நன்கு ஆராயப்பட்டு, தொற்றுக்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைப்போன்று குறைவடைந்தால், செப்டம்பர் 28 முதல் இரண்டாம் கட்டமாக கட்டுப்பாடுகள் இலகுவாக்கப்படவுள்ளன. இதன்படி:
- பொது இடங்களில் 5 பேர் வரை ஒன்றுகூடலாம்.
- பள்ளிகள் கட்டம் கட்டமாக ஆரம்பமாகும்.
- சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் திறக்கப்படும்.
- ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் வேலைத்தளங்களுக்கு திரும்பும்வகையில் பல பணியிடங்கள் திறக்கப்படவுள்ளன.
இதைத்தொடர்ந்து மாநிலத்தின் சுகாதார நிலைமை அனுமதித்தால் 26 அக்டோபர் முதல் மூன்றாம்கட்டமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இதன்படி:
- வீடுகளை விட்டு வெளியேசெல்ல காரணம் தேவையில்லை.
- ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்காது.
- வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர்களுக்கு வெளியே பயணம் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு நீக்கப்படும்.
- வெளியிடங்களில் 10 பேரும் வீடுகளில் 5 பேர் வரையும் ஒன்றுகூடலாம்.
- மேலதிகமாக பல வணிகங்கள் திறக்கப்படும்.
இதையடுத்து இறுதிகட்டமாக, சுகாதார நிலைமைகள் அனுமதித்தால் நவம்பர் 23 முதல் மேலதிகமாக கட்டுப்பாடுகள் இலகுவாக்கப்பட்டு அவை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால் மாநிலத்தில் 'COVID Normal' ஏற்படும் என Premier Daniel Andrews தெரிவித்தார்.
இதேவேளை Regional விக்டோரியாவில் ஒப்பீட்டளவில் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், அங்கு நடைமுறையிலுள்ள stage 3 கட்டுப்பாடு விரைவாக தளர்த்தப்படவுள்ளதாக Daniel Andrews தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க விக்டோரியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மேலும் 5 பேர் மரணமடைந்த அதேநேரம் கடந்த 24 மணிநேரத்தில் 63 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் கடந்த 24 மணிநேரத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 எனவும், ஏனைய 2 பேர் சமீபத்தில் இறந்ததாகவும் Premier Daniel Andrews தெரிவித்தார்.
இதையடுத்து விக்டோரியாவில் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 666 ஆக உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலியா முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 753 ஆக அதிகரித்துள்ளது.
விக்டோரியா முழுவதும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவிலுள்ள 19 பேர் உட்பட 283 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
விக்டோரியாவில் தற்போது கொரோனா பாதிப்பிற்குள்ளான 1872 பேர் இருக்கிறார்கள். இவர்களில் 261 பேர் சுகாதாரத்துறை ஊழியர்கள்.
அதேநேரம் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
