மெல்பேர்னில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகள் நாளை திங்கட்கிழமை முதல் தளர்த்தப்படுவதாக Premier Daniel Andrews அறிவித்தார்.
எதிர்பார்த்ததைவிடவும் மெல்பேர்ன் பெருநகரில் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைவடைந்ததால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதிக்கு முன்னதாகவே சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதன்படி இரவு 9pm-5am வரை நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு, நாளை செப்டம்பர் 28 முதல் நீக்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு, ஒரு தடவை, வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே shopping செல்லமுடியும் என்ற கட்டுப்பாடும் நீக்கப்படுகிறது. ஆனால் அதற்காக முழுக்குடும்பமும் shopping செல்லலாம் என்பதை இது அர்த்தப்படுத்தாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Shopping, மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றுக்கு மக்கள் தமது வீட்டிலிருந்து 5 கிலோமீட்டருக்கு உட்பட்ட இடங்களுக்கே செல்ல முடியும் என்ற கட்டுப்பாடு தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.
வெளியிடங்களில் ஒரே வீட்டிலுள்ளவர்கள் அல்லது இரண்டு வீடுகளைச் சேர்ந்தவர்கள் என அதிகபட்சம் 5 பேர் ஒன்றுகூடலாம். 5 கிலோமீட்டர் விதிக்கு கட்டுப்பட வேண்டும்
சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் திறக்கப்படுகின்றன.
ஒரு லட்சத்து 27 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் வேலைத்தளங்களுக்கு திரும்புகின்றனர்.
மேலும் அனுமதிக்கப்பட்ட பணியாளர்கள் தத்தம் வேலைத்தளங்களிலிருந்து 5 கிலோமீட்டருக்கு உட்பட்ட இடங்களில் உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.
திருமண நிகழ்வு வெளியிடங்களில் மணமக்களுடன் சேர்த்து 5 பேரை உட்படுத்தி நடத்தப்படலாம். மத ஆராதனைகளும் வெளியரங்களில் அதிகபட்சம் 5 பேருடன் அனுமதிக்கப்படுகிறது.
அக்டோபர் 12 முதல் பள்ளிகள் கட்டம் கட்டமாக ஆரம்பமாகும்.
இதைத்தொடர்ந்து மாநிலத்தின் சுகாதார நிலைமை அனுமதித்தால் 19 அக்டோபர் முதல் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படவுள்ளதாக Premier Daniel Andrews தெரிவித்தார்.
இதேவேளை கட்டுப்பாடுகளை மீறி ஒன்றுகூடல்களை நடத்துபவர்கள் மற்றும் அதில் பங்கேற்பவர்கள் 5 ஆயிரம் டொலர்கள் அபராதம் செலுத்தவேண்டும் என்ற புதிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
