மெல்பேர்னைச் சேர்ந்த பூமிகா என்ற 29 வயதுப் பெண் தன்னைப் பணிச்சுரண்டலுக்குள்ளாக்கிய முதலாளி மீது முறைப்பாடு செய்ததன் மூலம் 52,000 டொலர்களைப் பெற்றுள்ளார்.
கடந்த 2014 மார்ச் மாதம் மெல்பேர்னில் குடியேறிய பூமிகா மெல்பேர்ன் தென்கிழக்குப் பகுதியிலுள்ள இந்திய பலசரக்குக் கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்.
முழுநேரமாக அங்கு வேலை பார்த்த காலப்பகுதியில், மணித்தியாலத்திற்கு 16.50 டொலர்கள் மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டதாகவும், சம்பள பற்றுச்சீட்டு வழங்கப்படாத அதேநேரம் சுப்பர் அனுவேசன் தொகையும் கட்டப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சுகவீன மற்றும் வருடாந்த விடுமுறையும் தனக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த பூமிகா, இவை தொடர்பில் கடை உரிமையாளரிடம் கேட்டதாகவும், அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததையடுத்து இரண்டரை ஆண்டுகள் அக்கடையில் பணிபுரிந்த பின்னர் தான் அங்கிருந்து விலகிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
பின்பு அக்கடையின் உரிமையாளர் மீது Fair Work Ombudsman (FWO) மற்றும் ATO-இடம் பூமிகா முறைப்பாடு செய்திருக்கிறார்.
இதையடுத்து கொடுக்கப்படாத சம்பள நிலுவையான 42,000 டொலர்களையும், சுப்பர் அனுவேசன் தொகையாக 10,000 டொலர்களையும் கடை உரிமையாளர் வழங்கியிருக்கிறார்.
எனினும் தன்னுடைய கணக்கின்படி இன்னமும் 10,000 டொலர்கள் அக்கடை உரிமையாளரால் கொடுக்கப்படவேண்டியுள்ளதாகவும், அது கிடைக்கும்வரை தான் ஓயப்போவதில்லை எனவும் பூமிகா தெரிவித்துள்ளார்.
பணியிடங்களில் நீங்கள் சுரண்டப்படுவதாக உணர்ந்தாலோ அல்லது வேறேதும் சிக்கல்களை எதிர்கொண்டாலோ 13 13 94 என்ற இலக்கத்தில் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு Fair Work அறிவுறுத்தியுள்ளது. மொழிபெயர்ப்பு வசதி தேவைப்படுபவர்கள் 13 14 50 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்.