ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற விண்ணப்பிப்பவர்களின் ஆங்கிலமொழிப் புலமையை பரீட்சிக்கும் புதிய பரீட்சையொன்றை அறிமுகப்படுத்த அரசு ஆலோசித்துவருகிறது.
ஆஸ்திரேலிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் அதற்கான பரீட்சையை ஆங்கிலத்தில் எதிர்கொள்கின்றபோதிலும் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அப்படியான பரீட்சைகள் எதுவும் கிடையாது.
இதன் காரணமாக 2016ம் ஆண்டு தரவுகளின்படி நாட்டிலுள்ள ஏறக்குறைய 1 மில்லியன் பேருக்கு அடிப்படை ஆங்கில அறிவு இல்லை என பல்கலாச்சார அலுவல்கள் அமைச்சர் Alan Tudge தெரிவித்துள்ளார்.
எனவே இந்தநிலையை மாற்றி ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற விரும்பும் அனைவரும் சமூகத்திலுள்ள ஏனையவர்களுடன் நல்லுறவைப் பேணும் வகையில் அடிப்படை ஆங்கில அறிவைக்கொண்டிருக்க வேண்டுமென வலியுறுத்திய அமைச்சர் Alan Tudge, இதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக ஆங்கில மொழி பேச்சுத்தொடர்பாடலைப் பரிசோதிக்கும் வகையில் இவ் ஆங்கில மொழிப் பரீட்சை அமையலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு குடியுரிமைச்சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியின் ஒரு அங்கமாக கடுமையான ஆங்கிலமொழிப் பரீட்சையை அறிமுகப்படுத்த அரசு தீர்மானித்த போதிலும் செனட் அவையில் இச்சட்டமுன்வடிவு தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கும் ஆங்கிலப் பரீட்சையை அறிமுகப்படுத்த அரசு ஆலோசித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share
