கேரளாவிலிருந்து கடந்த ஜனவரி 12ஆம் தேதி 243 பேருடன் புறப்பட்ட படகுக்கு என்ன நடந்தது என்பது தெரியாதநிலையில் இப்படகை கண்டுபிடிக்கும் பணிகளில் இந்திய அரசுடன் இணைந்து செயற்படுவதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
குறித்த படகு தொடர்பில் ஆஸ்திரேலிய அரசுக்கு ஏதாவது தெரியுமா என்பது தொடர்பில் நாம் எழுப்பிய கேள்விக்கு ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சு பின்வருமாறு பதிலளித்துள்ளது:
- காணாமல் போன படகு எங்குள்ளது என்பதைக் கண்டறியும் நடவடிக்கைகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆஸ்திரேலிய அரசு இந்திய அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது.
- குறித்த படகு தொடர்பில் இன்டர்போல் அமைப்பு வழியாக இந்திய அரசு விடுத்த அனைத்து கோரிக்கைகளுக்குமான பதில்கள் வழங்கப்பட்டுள்ளன.
- கிட்டத்தட்ட 6 மாதங்களாக இப்படகு எங்குள்ளது என்பது தெரியாமல் உள்ளமையானது கடல்வழி ஆட்கடத்தல் நடவடிக்கையானது எந்தளவு ஆபத்தானது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
- இதன்காரணமாகவே ஆஸ்திரேலிய அரசு தனது எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கைகளை இறுக்கமாகப் பேணுவதற்கு உறுதிபூண்டுள்ளது.
- ஆட்கடத்தல் குற்றவாளிகளுக்கு எதிரான மற்றும் சட்டவிரோத படகுப்பயணங்களில் மக்கள் தமது உயிர்களைப் பணயம் வைப்பதைத் தடுப்பதற்கான எமது நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்'
காணாமல்போயுள்ள படகு தொடர்பிலான மேலதிக விபரங்களுக்கும் அப்படகில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் சிலருடைய கருத்துக்களுடன் நாம் வழங்கிய செய்தி விவரணத்தையும் செவிமடுக்க:
இதேவேளை இப்படகு தொடர்பில் கேரள அரசு இன்டர்போல் அமைப்பு ஊடாக விடுத்த 'Blue Notice' தொடர்பில் பதிலளிக்குமாறு நியூசிலாந்து குடிவரவுத்துறையிடம் நாம் கோரியிருந்த நிலையில் குறித்த விடயம் இன்டர்போல் விவகாரம் என்பதால்-நியூசிலாந்து பொலிஸாரிடம் இவ்விடயத்தை எடுத்துச்செல்லுமாறும் தாம் இது தொடர்பில் பதிலளிக்க முடியாது எனவும் Immigration NZ Assistant General Manager Stephen Vaughan தெரிவித்துள்ளார்.
எனினும் நியூசிலாந்து நோக்கி சட்டவிரோத பயணங்கள் மேற்கொள்வதற்கு ஆட்கடத்தல்காரர்கள் தொடர்ந்தும் முனைப்புடன் இருப்பதை நியூசிலாந்து அரசு அறிந்துள்ளதாகவும் இது தொடர்பில் தாம் விழிப்புடன் செயற்படுவதாகவும் Stephen Vaughan தெரிவித்துள்ளார்.
Share

