மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு அப்பாலுள்ள கடற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய எரிபொருள் தாங்கி Montara வெடித்து அதிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு கடலில் கலந்ததினால் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களது வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக தெரிவித்து இந்தோனேஷிய மீனவர்கள் மற்றும் கடற்பாசி உற்பத்தியாளர்கள் ஆஸ்திரேலியா அரசிடம் நட்டஈடு கோரி ஐக்கிய நாடுகள் சபையிடம் முறையிட்டிருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கூட்டு நடவடிக்கையின் பிரகாரம், தமக்கு 2100 கோடி ஆஸ்திரேலியா டொலர்கள் தரவேண்டும் என்று அந்த முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டும் ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு அப்பாலுள்ள கடற்பகுதியில் அமைந்திருந்த Montara ஆஸ்திரேலிய எரிபொருள் தாங்கியில் வெடிப்பு ஏற்பட்டது.
ஆஸ்திரேலியாவின் மிகப்பாரதூரமான வெடிப்பாக கருதப்பட்ட இந்த சம்பவத்தினால் 90 லட்சம் கலன் எரிபொருள் தீமோர் கடலில் கலந்தது.
சுமார் 75 நாட்களாக தொடர்ச்சியாக கடலில் பரவிய இந்த எண்ணெய்யும் எரிவாயுவும் இந்தோனேஷிய கடல்வரை சென்றது.
இந்த சம்பவத்தினால் இந்தோனேஷிய கடலோர மக்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்தததுடன், கடல்வாழ் உயிரினங்கள் அழிந்ததினால் அந்தப்பகுதி கடற்றொழில் பாதிக்கப்பட்டதாக தெரிவித்து, நட்டஈடு கோரி இவ்விடயம் ஐக்கிய நாடுகள் சபையிடம் போயிருக்கிறது.
