இலங்கையிலிருந்து வரும் படகுகளும், ஆஸ்திரேலிய அரசின் நடவடிக்கைகளும்!

இலங்கையிலிருந்து வரும் ஆட்கடத்தல் படகுகளைத் தடுப்பதற்காக ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்ட முயற்சி, ஆட்கடத்தல்காரர்களால் எளிதில் முறியடிக்கப்படக்கூடியது என மீனவர்களை மேற்கோள்காட்டி ABC செய்திவெளியிட்டுள்ளது.

boat

Source: SBS

ஆட்கடத்தல் நடவடிக்கைக்கு பெரும்பாலும் மீன்பிடிப் படகுகளே பயன்படுத்தப்படுவதால், குறித்த படகுகள் எங்கே செல்கின்றன என்பதைக் கண்காணிப்பதற்கென சுமார் 4200 GPS கண்காணிப்புக் கருவிகளை ஆஸ்திரேலிய அரசு அண்மையில் இலங்கைக்கு வழங்கியிருந்தது.

ஆனால் இந்த கண்காணிப்புக் கருவிகளை இலகுவாக நீக்கிவிட்டு, ஆட்கடத்தல்காரர்கள் தமது நடவடிக்கைகளுக்கு படகுகளைப் பயன்படுத்தும் நிலை காணப்படுவதாக அங்குள்ள மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து இந்த ஆண்டு மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், படகுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியா வருவதற்கு முயற்சித்திருந்தனர்.

கடந்த 2013ம் ஆண்டின் பின்னர், அதிகளவான படகுகள் இவ்வாண்டு ஜுன் மாதம் ஆஸ்திரேலியா நோக்கி வருகைதந்திருந்தன.

இதையடுத்து ஆஸ்திரேலியாவில் புதிதாக ஆட்சிப்பொறுப்பேற்ற லேபர் அரசு, இலங்கையிலிருந்து புறப்படுகின்ற படகுகளைத் தடுத்துநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியது.
இதன் ஒரு அங்கமாகவே மீன்பிடிப் படகுகளுக்கான கண்காணிப்பு கருவிகள் வழங்கப்பட்டிருந்தன.

ஆனால் ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை பயனற்றது என இலங்கை மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எப்படியிருப்பினும் ஆஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்புக்கொள்கை மாறவில்லை எனவும், படகு மூலம் இங்கு வருபவர்கள் ஒருபோதும் குடியமர்த்தப்படமாட்டார்கள் எனவும் ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா நோக்கி வரும் படகுகள், கடந்த 2013ம் ஆண்டு முதலே திருப்பி அனுப்பப்படுவதாகவும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
A boat carrying asylum seekers arriving at Christmas Island in 2012
In this file image, a boat carrying asylum seekers arrives at Christmas Island on Thursday, June 28, 2012. Source: AAP
இதுஇவ்வாறிருக்க ஆஸ்திரேலியாவிற்கான ஆட்கடத்தல் படகு விவகாரத்தில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சகோதரர் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக ABC செய்தி தெரிவிக்கிறது.

சிவநேசதுரை அகிலகுமார் என்பவரே இவ்வாறு விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகவும், இவரிடம் இரு ட்ரோலார் படகுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

படகுமூலம் ஆஸ்திரேலியா வரமுயன்று பிடிபட்ட பலர் அகிலகுமார் ஊடாகவே தாம் பயணம் மேற்கொண்டதாகத் தெரிவித்ததாக ABC செய்தி கூறுகிறது.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சகோதரரே அகிலகுமார் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இவ்விவகாரத்தில் பிள்ளையான் சம்பந்தப்பட்டிருப்பதாக ABC கருதவில்லை எனவும், இதுதொடர்பில் ABC கருத்துக்கேட்க முற்பட்டபோதும், பிள்ளையானிடமிருந்து பதில் வரவில்லை எனவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் தனக்கும் ஆட்கடத்தல் படகுகளுக்கும் தொடர்பில்லை எனவும், தனது பெயரை ஆட்கடத்தல்காரர்கள் பயன்படுத்துவதாகவும் அகிலகுமார் ABC-யிடம் தெரிவித்துள்ளார்.

தனது குடும்பம் அரசியல் பின்னணியுடையது என்பதால் ஆட்கடத்தல்காரர்கள் தனது பெயரைப் பயன்படுத்துவதாக அகிலகுமார் மேலும் கூறியுள்ளார்.
AAP Image/Amnesty International
Source: AAP / AAP Image/Amnesty International
இதேவேளை ஆஸ்திரேலியாவிற்கு படகு மூலம் வரமுயன்று மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்ட தினேஸ்வரன் என்பவர் கருத்துத்தெரிவிக்கும்போது, தாம் பல சிரமங்களுக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவிற்கு படகுப் பயணம் மேற்கொண்டதாகவும், இடைவழியில் மறித்த ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் தம்மை பெரிய கப்பலில் ஏற்றி இலங்கைக்கே திருப்பி அழைத்துவந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் கப்பலில் தம்மை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துச்செல்வதாகவே எல்லைப் படையினர் தெரிவித்ததாகவும், 10 நாள் பயணத்தின்பின்னர் கப்பலைவிட்டு வெளியில் வந்தபோது மீண்டும் இலங்கைக்கு வந்திருப்பதை உணர்ந்துகொண்டதாகவும் தினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ வழியில்லாததாலேயே தாம் ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டதாகவும், ஆஸ்திரேலிய அரசு தமதுநிலையைப் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் மற்றுமொருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து மனிதாபிமான அடிப்படையில் அகதிகளை உள்வாங்கும் நடவடிக்கையை மேற்கொள்வதன்மூலம், நெருக்கடியிலுள்ள இலங்கை மக்களுக்கு ஆஸ்திரேலிய அரசு உதவலாம் என ஏதிலிகள் கழகத்தைச் சேர்ந்த Asher Hirsch வலியுறுத்தியுள்ளார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share

Published

Updated

Source: SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand