Highlights
- தென்மேற்கு சிட்னியில் நாளை காலை 7 மணிமுதல் மேலதிக பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
- அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படும் உள்ளூராட்சி பகுதிகளாக Fairfield, Canterbury-Bankstown மற்றும் Liverpool ஆகியன காணப்படுகின்றன.
- மிக ஆபத்தான திரிபடைந்த Delta வகை கொரோனா வைரஸ் தொற்று மாநிலத்தில் பரவிவருகின்றது.
நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கோவிட் பரவலின் மையப்புள்ளியாக காணப்படும் தென்மேற்கு சிட்னியில் வாழ்பவர்கள் வீடுகளில் தங்கியிருப்பதை உறுதிசெய்யும்வகையில் மேலதிக பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படும் உள்ளூராட்சி பகுதிகளாக Fairfield, Canterbury-Bankstown மற்றும் Liverpool ஆகியன காணப்படுவதாகவும் இப்பகுதிகள் தொடர்பில் தாம் அதிக கரிசனை கொண்டுள்ளதாகவும் Premier Gladys Berejiklian தெரிவித்திருந்தபின்னணியில் நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் இந்நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
குறிப்பாக நாளை காலை 7 மணிமுதல் தென்மேற்கு சிட்னியில் மேலதிகமாக நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக துணை ஆணையர் Tony Cooke தெரிவித்தார்.
இதன்கீழ் தென்மேற்கு சிட்னியில் வாழ்பவர்கள் stay-at-home உத்தரவை சரிவர கடைப்பிடிக்கிறார்களா என்பதையும், அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே வீடுகளைவிட்டு வெளியேறுகிறார்களா என்பதையும் பொலிஸார் கண்காணிக்கவுள்ளனர்.
குறித்த பகுதிகளிலுள்ள வணிக வளாகங்களில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் பொலிஸார் அங்கு வருபவர்கள் உண்மையிலேயே அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகத்தான் வருகிறார்களா என்பதை சோதனையிடவுள்ளனர்.
இன்றையதினம் புதிதாக 38 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தநிலையில் இவர்களில் 21 பேர் தென்மேற்கு சிட்னியில் வாழ்பவர்கள் எனவும், இப்பகுதிகளில் உள்ளவர்கள் கோவிட் சோதனை செய்துகொள்ளும் வீதமும் குறைவாகவே உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வீடுகளில் தங்கியிருப்பதன்மூலம் மட்டுமே இப்பரவலைக் கட்டுப்படுத்தமுடியும் என தெரிவித்துள்ள Premier Gladys Berejiklian, அநாவசியமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களைச் சந்திப்பதை தவிர்க்குமாறும் அத்தியாவசிய பராமரிப்பு வழங்கவேண்டுமெனில் மட்டுமே இன்னொருவரின் வீட்டிற்குச் செல்லுமாறும் வலியுறுத்தினார்.
சர்வதேச விமானசேவைக் குழுவினரை ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்ட 60 வயதுகளிலுள்ள ஓட்டுனர் ஒருவருக்கு முதன்முதலாக மிகவும் ஆபத்தான திரிபடைந்த Delta வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தநிலையில் அவரிடமிருந்தே இப்பரவல் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.