ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிஸன் இந்த மாதம் இந்தியாவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை ரத்துச்செய்துள்ளார். இந்த தகவலை இந்திய பிரதமர் மோடியும் உறுதி செய்துள்ளார்.
நாட்டில் காட்டுத்தீ அனர்த்தம் ஏற்படுத்திவருகின்ற பேரழிவுகளை அடுத்து, பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்தவேண்டியிருப்பதால் இப்போதைக்கு வெளிநாட்டுப்பயணம் எதையும் மேற்கொள்வது உசிதமானது அல்ல என்று ஸ்கொட் மொறிஸன் கூறியிருக்கிறார்.
காட்டுத்தீ ஏற்பட்டபோது சுற்றுலா சென்றிருந்தார் என்று பிரதமர் ஸ்கொட் மொறிஸனுக்கு எதிராக ஏற்கனவே பலத்த அரசியல் அழுத்தங்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிகரித்துவரும் நிலையில், தனது அரசியல் இருப்பு குறித்தும் நிர்வாக அணுகுமுறைகள் குறித்தும் அவர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதற்கு முயற்சிக்கிறார். அதன் ஒரு அங்கமாக அவர் வெளிநாட்டு பயணங்களை ரத்துசெய்திருக்கிறார் என்று அரசியல் அவதானிகள் கூறியுள்ளார்கள்.
ஸ்கொட் மொறிஸனின் முடிவினை தான் ஏற்றுக்கொள்வதாகவும் ஆஸ்திரேலியா தற்போது முகம் கொடுத்துள்ள பேரனர்த்தம் குறித்து தான் புரிந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ள இந்தியப்பிரதமர் மோடி, காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தனது வருத்தத்தினை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்கொட் மொறிஸனின் ஜப்பான் பயணமும் திட்டமிட்டபடி இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
