ஆஸ்திரேலிய பிரதமருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் நேற்றிரவு நடைபெற்ற நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் Bill Shorten வழங்கிய பதில்களின் அடிப்படையில் அவர்தான் வெற்றியாளர் என்று விவாதத்துக்கு நேரடியாக சமூகமளித்திருந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
எதிர்வரும் மே 18 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதான கட்சிகள் இரண்டும் தங்களது கொள்கைகளை மக்களிடம் கொண்டுசெல்வதில் போட்டிபோட்டவண்ணமுள்ளன.
இந்நிலையில், நேற்றிரவு இடம்பெற்ற இருகட்சி தலைவர்களுக்கு இடையிலான பகிரங்க விவாதம் நாட்டு மக்களால் கூர்மையாக அவதானிக்கப்பட்டது. நேற்றைய விவாதத்தின்போது நாட்டின் பொருளாதாரம், வரி, முதலீடுகள், அகதிகள் விவகாரம், குடிவரவாளர்கள் என்று பல தரப்பட்ட விடயங்கள் இரண்டு தலைவர்களிடமும் கேட்கப்பட்டன. பிரதமர் Scott Morrison எதிர்க்கட்சித்தலைவர் Bill Shorten மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையிலான இடைக்கேள்விகளையும் முன்வைத்தார். ஆனால், அந்தக்கேள்விகளுக்கு மிகப்பொறுமையாகவும் சாதுரியமாகவும் Shorten பதிலளித்தார் என்று விவாதத்தை நேரடியாக பார்த்தவர்கள் கூறியுள்ளார்கள்.
இந்த விவாதத்தினை நேரில் பார்த்த 48 வாக்காளர்களில் 25 பேர் Bill Shorten நேற்றைய விவாதத்தின் வெற்றியாளர் என்றும் 12 பேர் Scott Morrison என்றும் கூறியுள்ளார்கள். 11 பேர் முடிவெடுக்க முடியவில்லை என்று பதிலளித்துள்ளார்கள்.
