SKIP TO MAIN CONTENT

நுளம்பு என்பதா? கொசு என்பதா? கவலை வேண்டாம் எமோஜி வருகிறது!

Mosquito என்பதற்கு தமிழில் நுளம்பு என்பதா? இல்லை கொசு என்பதா? கவலை வேண்டாம் எமோஜியிலேயே சொல்லிவிடலாம். 2018 ஆம் ஆண்டு அறிமுகமாகும் எமோஜிக்கள் எவை என்று ஒருங்குறி அல்லது யூனிகோட் (Unicode) என்ற குறிமுறை நியமத்தைக் கட்டுப்படுத்தும் யூனிகோட் அமைப்பு தரவு வெளியிட்டுள்ளது. அதில் mosquitoவும் அறிமுகமாகிறது.

Mosquito Emoji
Source: SBS Tamil

1 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan



Skip to article content

இந்த வருடம் அறிமுகமாகும் 157 புதிய எமோஜிக்களில்,  பல்வேறு முடி (செம்முடி, சுருள் முடி, வெண்முடி, மற்றும் வழுக்கை) பாணியிலான ஆண்களும் பெண்களும் அறிமுகமாகிறார்கள்.  அவை மட்டுமல்ல, வெவ்வேறு இனங்களைக் குறிக்கக் கூடிய புதிய சூப்பர் ஹீரோ, சூப்பர் ஹீரோயின்களும், பல்வேறு தோல் நிறங்களுடனான கால், பாதம் என்பனவும் அறிமுகமாகின்றன. 

புதிய எமோஜி தொகுப்பு, இந்த வருடம் ஜூன் மாத இறுதிக்குள் வெளியாகும் யூனிகோட் 11.0 வெளியீட்டில் சேர்க்கப்படும் என்றும், இந்த வருடத்திலிருந்து எமோஜிக்களும் யூனிகோட் தொகுப்பு இலக்கத்தை அடிப்படையாகக் கொண்ட அடையாள இலக்கத்தைக் கொண்டிருக்கும் என்றும் யூனிகோட் அமைப்பு வெளியிட்ட செய்தியில் சொல்லப்பட்டுள்ளது.  இப்பொழுது பாவனையிலுள்ள எமோஜிக்களின் பதிப்பெண் 5.0.  அடுத்த வெளியீடு (6.0 க்கு பதிலாக) 11.0 என்று, யூனிகோட் தரநிலைக்கு தொடர்புடைய பதிப்பு எண்ணுடன் ஒத்திசைக்கப்படுகிறது.

குறியீடு வேலைகளை செயலி தயாரிப்பாளர்கள் ஆரம்பிப்பதற்காக, புதிய 157 எமோஜிக்கள் குறித்த தரவுகளை யூனிகோட் அமைப்பு வெளியிட்டு விட்டது.  புதிய எமோஜி எழுத்துருக்கள் மொபைல் தொலைபேசிகள் மற்றும் செயலிகளில் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உங்களிடம் புதிய எமோஜிக்கான யோசனை இருந்தால், அது எமோஜி 12.0ல் கருத்தில் கொள்ளப்பட விரும்பினால், இந்த வருடம் மார்ச் இறுதிக்குள் அவற்றை யூனிகோட் அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டும்.  அது சேர்த்துக் கொள்ளப்பட்டால், யூனிகோட் ஸ்டாண்டர்ட்டின் 2019 வெளியீட்டில் இந்த அட்டவணை வரிசைப்படுத்தப்படும்.

கொசு அல்லது நுளம்பு, எமோஜி ஆகுவதற்கு ஒரு ஆஸ்திரேலியர் தான் காரணம்.  அதனை Queensland University of Technologyஐச் சேர்ந்த வைரசு நோய் வல்லுநர்  Dr. Ian M Mackay தான் கோரியிருந்தார். http://www.unicode.org/L2/L2017/17295-mosquito-emoji.pdf  

 

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now