இந்தியாவின் குடியுரிமை திருத்த சட்டம் (The Citizenship (Amendment) Act, 2019) இந்தியாவில் விவாத பொருளாய் தொடர்ந்து இருப்பது போலவே இங்கும், ஆஸ்திரேலியாவில் இந்த சட்டம் குறித்த விவாதம் பல மட்டங்களில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் கிரீன்ஸ் கட்சி தீர்மான முன்வடிவு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. கிரீன்ஸ் கட்சியின் NSW மாநில நாடாளுமன்ற உறுப்பினர் David Shoebridge அவர்கள் நாடாளுமன்றத்தில் மேல் சபையில் இந்த தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார். இந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு எதுவும் நடைபெறவில்லை என்றபோதிலும் இந்த தீர்மான முன்மொழிவு கூர்ந்து பார்க்கப்படுகிறது.
இந்திய அரசுடன் ஆஸ்திரேலியா நடத்தும் உரையாடல்களில் மனித உரிமைகளைப்பற்றியும் பேசவேண்டும் என்று இந்த தீர்மான முன்மொழிவு கோருகிறது.

இந்த தீர்மான முன்மொழிவு குறித்து NSW மாநில நாடாளுமன்ற கிரீன்ஸ் கட்சிஉறுப்பினர் David Shoebridge அவர்கள் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய மக்கள் தன்னிடம் முறையிட்டதின் பேரில் இந்த தீர்மானத்தை தாம் தாக்கல் செய்துள்ளதாகவும், ஆஸ்திரேலிய இந்திய அரசுகளின் வர்த்தக பரிமாற்றங்களில் ஆஸ்திரேலிய அரசு இந்தியாவின் மனித உரிமைகள் பற்றியும் பேசவேண்டும் என்றும், முக்கியமாக இந்தியாவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஆஸ்திரேலிய அரசு அதிக கவனம் செலுத்தவேண்டும் வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவின் இந்த புதிய குடியுரிமை சட்டத்தை ஏன் ஒரு சிலர் எதிர்க்கிறார்கள்? என்ற கேள்வி பிறக்கிறது.
இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தின்படி பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குடியேற வரும் முஸ்லீம்கள் அல்லாதவர்களுக்கு மாத்திரம் துரிதமாக குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழி வகுக்கிறது.

இந்த சட்டத்தின்படி 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்திருக்கும் இந்து, சீக்கிய மதத்தவர், புத்தம், பார்சி, ஜெயின் மற்றும் கிருஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள், அவர்கள் ஆறு வருடங்கள் இந்தியாவில் வசித்து இருந்தால், இந்திய குடியுரிமை கேட்டு மனு செய்யலாம் என்று இந்த சட்டம் கூறுகிறது.
குடியுரிமை வழங்குவதில் மத வாரியாக மக்களை பிரித்து அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது, மதத்தின் பேரில் மக்களை பிரிக்கும் சட்டம் என்று David Shoebridge வாதிடுகிறார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இருந்து குடியுரிமை கேட்டு வரும் முஸ்லீம் மக்களை மிகவும் வெளிப்படையாகவே ஒதுக்கும் வகையில் இந்த சட்டம் அமைந்துள்ளது என்று Shoebridge கூறுகிறார். மேலும், இந்தியாவின் பெருமைக்குரிய ஜனநாயக அமைப்பில் மதத்தை வைத்து மக்களை பிரிக்கும் சட்டம் இதுவே முதல் முறையாகும் என்றும், இந்த சட்டத்தினால் ஒதுக்கப்பட்ட மக்களின் ஆதங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றும் அவர் கூறுகிறார்.
ஆனால் David Shoebridge இன் இந்த கருத்துக்கு ஆஸ்திரேலியாவில் வாழும் சில இந்திய மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

David Shoebridge அவர்களின் தீர்மான முன்மொழிவு அபத்தமான ஒன்று என்று விமர்சிக்கிறார் Institute for Australia India Engagement-ன் CEO மற்றும் Founding Executive Director Dr Ashutosh Misra அவர்கள். இந்த தீர்மானத்தை ஆதரிப்பவர்களுக்கு காஷ்மீரில் நடந்து வரும் சமூக மற்றும் அரசியல் நிலைமைகள் புரியாமல் இருக்கிறது என்றும், அதை தவிர்த்துவிட்டு வெறுமனே மனித உரிமைகளை மாத்திரம் தனியாக எடுத்து பேச முடியாது என்றும் Dr Misra கூறுகிறார்.
1990-லிருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் வாழும் இரண்டு லட்சத்துக்கும் மேலான காஷ்மீரிய மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், அல்லது பலாத்காரப்பட்டுள்ளார்கள், அந்த பகுதியில் இருந்து விரட்டப்பட்டுள்ளார்கள் என்றும் அவர்கள் மீண்டும் தங்களின் சொந்த இடங்களுக்கு போவது எப்படி என்று தெரியாமல் இருக்கிறார்கள் என்றும் இவர்களின் நிலை பற்றி David Shoebridge-ன் தீர்மான முன்மொழிவில் எதுவும் கூறப்படவில்லை என்றும் Dr Misra குற்றம் சாட்டுகிறார்.
இந்த தீர்மான முன் மொழிவை தாம் NSW நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசுகையில், இந்தியாவுடன் வர்த்தக தொடர்பாக பேச்சு வார்த்தைகளை நடத்தும் போது மனித உரிமையும் பேசப்படவேண்டும் என்றும் ஆனால் இந்தியாவின் மனித உரிமை குறைபாடுகளைப்பற்றி அரசியல்வாதிகள் பலர் பேசுவதில்லை என்பது குறித்து தான் வருத்தப்படுவதாகவும் David Shoebridge குறிப்பிட்டார்.

மேலும், ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள பாரம்பரிய நாடுகள் என்றும் எனவே வர்க்கத்தையும் மனித உரிமைகளையம் தனித்தனியாக பார்க்காமல், சில அம்சங்கள் நெருடலாக இருந்தாலும்கூட அவற்றைப்பற்றி பேச இருநாடுகளும் தயங்கக்கூடாது என்றும் NSW மாநில நாடாளுமன்ற கிரீன்ஸ் கட்சிஉறுப்பினர் David Shoebridge கூறினார்.
இந்த தீர்மானம் இன்னும் NSW மாநில நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு கொண்டு வரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
