பெட்ரோலின் விலை 1970 களில் இங்கு லிட்டர் 21 சதமாக இருந்தது. இப்போது சராசரி லிட்டர் $1.80 ஆகவும் சில இடங்களில் ஏறக்குறைய $2.00 டாலர்களுக்கு விற்கப்படுவதாகவும் செய்திகள் சொல்கின்றன. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பெட்ரோலின் விலை 36 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்த விலைக்கு இப்போதும் பெட்ரோலை வாங்கமுடியும் என்பது நடைமுறைச் சாத்தியமில்லை. இருந்தபோதிலும், விலையுயர்வு எங்கே தொடங்கியது என்று பார்த்தால் 1978 இல் Malcom Fraser தலைமையிலான கூட்டணி ஆட்சிக்காலத்தில், அப்போதைய கருவூலக்காப்பாளர் John Howard கொண்டுவந்த ‘fuel tax’ எரிபொருளுக்கான வரி அறிமுகமானபோதுதான். இதன் காரணமாக லிட்டர் 21 சதமாக அப்போது இருந்த பெட்ரோலின் விலை 25 சதமாக அதிகரித்தது. அப்போது 4 சதமாக இருந்த வரி இன்று லிட்டர் 44 சதமாகும். அதாவது இப்போது சராசரி லிட்டர் $1.80 இற்கு வாங்கும் பெட்ரோலின் உண்மையான விலை $1.36 ஆகும்.
ஆஸ்திரேலியாவில் பெருமளவு கச்சா எண்ணெய் உற்பத்திசெய்யப்படுவதாகச் சொல்லப்பட்டாலும், பெட்ரோல் விலை ஏற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. ஏனெனில், 1970 காலப்பகுதியில் நமக்குத்தேவையான கச்சா எண்ணெயின் 70 சதவீதம் இங்கு உற்பத்தியானது. ஆகவே சர்வதேச ரீதியாக கச்சா எண்ணெயின் விலை உயர்ந்த காலகட்டத்திலும் இங்குள்ள வாகன ஓட்டிகள் அப்போது பாதிக்கப்படவில்லை.

குறிப்பாக, 1978 இல் கொண்டுவரப்பட்ட ‘fuel tax’ எரிபொருள் வரியின் மற்றொரு அங்கமாக ‘இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலைக்கே ஆஸ்திரேலிய கச்சா எண்ணெயும் இங்குள்ள refineries என்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும்’ என்ற அரசின் தீர்மானம் காரணமாக சர்வதேச விலைகளுக்கே பெட்ரோல் வாங்கவேண்டிய நிர்ப்பந்தம் இங்குள்ள வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்டது. இதனால் அரசுக்கு வருடாந்தம் 676 மில்லியன் டாலர்கள் வருமானம் கிடைக்கும் என்று அப்போது John Howard கூறினார். இருந்தபோதும் இத்தாலியில் லிட்டர் 49 சதம் என்ற நிலையிலும் பிரான்ஸ் , ஜப்பான் ஆகிய நாடுகளில் 44 சதமென்ற நிலையிலும் ஆஸ்திரேலியாவில் இந்த மாற்றங்களின் பின்பும் லிட்டரின் விலை 26 சதம் தான்என்பது அவரது அப்போதைய வாதமாகும். அதன்பின்னர் பதவிக்கு வந்த எந்த அரசும் இந்த ‘fuel tax’ அல்லது ‘import parity pricing’ என்ற உள்ளூர் கச்சா எண்ணெயை சர்வதேச விலைக்கே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வழங்குவது என்பதையோ மாற்ற முயற்சிக்கவில்லை.
ஆஸ்திரேலியாவில் இப்போது கச்சா எண்ணெய் உற்பத்தி வெகுவாக வீழ்ச்சியடைந்து விட்டது என்பது மட்டுமல்ல 20 வருடங்களுக்கு முன் இங்கு 8 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இருந்தன. இவை படிப்படியாக மூடப்பட்டு இன்று மூன்று நிலையங்கள் மட்டுமே இயங்குகின்றன. இந்த மூன்று நிலையங்களும் மிகச்சிறியவை என்பதோடு பழையவை. ஆசிய பிராந்தியத்திலுள்ள நவீன, பெரிய எண்ணெய்சுத்திகரிப்பு நிலையங்களுடன் போட்டி போட அவற்றால் முடியவில்லை. இங்கு வாகனங்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக இப்போது அதிகரித்திருப்பதால் எரிபொருளுக்கான தேவை பல மடங்கு அதிகரித்துவிட்டது. ஆகவே உள்நாட்டுத்தேவைக்கான 90 சதவீதமான எண்ணெய், கச்சா எண்ணெயாகவோ பெட்ரோலியப் பொருளாகவோ வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகவேண்டியிருக்கிறது. சர்வதேச சந்தை நிலைமைகளுடன் போட்டியிட்டே இதை நாம் வாங்கவேண்டியுள்ளது. அத்தோடு அமெரிக்க டாலருக்கு எதிராக ஆஸ்திரேலிய டாலர் பெறுமதி இழந்து வருவதாலும் நாம் சர்வதேசச் சந்தையில் வாங்கும் எரிபொருளின் விலை அதிகமாகிறது.

எண்ணெய் ஏற்றுமதிசெய்யும் நாடுகள் எண்ணெய் விலையை அதிகரித்துவிட்டதும் ஒருகாரணம் என்று சொல்லப்படுகிறது. பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கு பொருளாதார கோட்பாடுகளின் படி இரண்டு பிரதான காரணங்கள் தான். ‘Demand and supply’. தேவை மற்றும் வழங்கல். பெட்ரோலியப் பொருட்களைப் பொறுத்த அளவிலும் அதே கோட்பாடுதான்.
Covid 19 காரணமாக சர்வதேசரீதியாக ஏற்பட்ட முடக்க நிலையிலிருந்து பல நாடுகள் மெதுவாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையிலும் போக்குவரத்து மற்றும் manufacturing என்ற உற்பத்தி துறைகளில் மீண்டும் குறிப்பிடத்தக்க activities - செயல்பாடுகள் ஏற்பட்டு வரும் நிலையிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தேவைப்பட்டதைவிட மிக அதிகமான எரிபொருள் தேவை இன்று ஏற்பட்டிருக்கிறது.
இந்த அதிகரித்த தேவையைச்சமாளிக்கத்தேவையான எண்ணெய் சந்தையில் இல்லை என்பது மற்றொரு காரணம்.
OPEC (Organisation of The Petroleum Exporting Countries) என்பது ‘எண்ணெய் ஏற்றுமதிசெய்யும் நாடுகளின் அமைப்பு’. இந்த அமைப்பு திட்டமிட்டே சர்வதேச சந்தையில் எண்ணெய் விநியோகத்தை கட்டுப்படுத்திவருகிறது. Covid 19 மற்றும் அதன் திரிபுகள் காரணமாக ஏற்பட்ட முடக்கநிலை முற்றாக விடுபடவில்லை என்றும் மீண்டும் இதைவிட மோசமான முடக்கநிலை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் தொடர்ந்து நிலவுவதாகவும் OPEC அமைப்பு நம்புகிறது. அளவுக்கதிமான எண்ணெய் சந்தையில் இருக்கும் நிலை உருவாகும் போது முடக்கநிலை மீண்டும் ஏற்பட்டால் எண்ணெய் விலை பலமடங்கு சரிந்துவிடும் என்பதும் தமது லாபம் பாதிக்கப்படும் என்பதும் OPEC இன் வாதமாகும். 2020 காலப்பகுதியில் ஏற்பட்ட முடக்கநிலையின்போது எண்ணெய் விலையில் 20 தொடக்கம் 30 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டது என்றும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர் என்பதும் சுட்டிக்காட்டப் படுகிறது. இப்போதைய விலையேற்றம் காரணமாக OPEC நாடுகளின் வருமானம் அதிகரித்திருப்பதால் தேவைக்கேற்ற விநியாகத்தை வழங்காமல் supply ஐக் கட்டுப்படுத்துவது தமக்கு லாபம் என்ற ரீதியிலேயே அவை செயல் பட்டு வருகின்றன.

சர்வதேச விலை ஏற்றம் ஒருபுறம் இருக்க, Filling stations என்ற நிரப்பு நிலையங்கள் விலைகளை இடத்திற்கிடம் வித்தியாசமாக நிர்ணயம் செய்கின்றன. இயல்பாகவே தமக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் என்ன விலைக்கு கிடைக்கிறது என்பதைப்பொறுத்தே நிரப்பு நிலையங்கள் விற்பனை விலையைக்குறிக்கின்றன. நிலையத்திற்கான வாடகை, ஊழியர் சம்பளம், மின்சாரம் மற்றும் தண்ணீர் என்பவற்றுக்கான செலவுகள் storage, cleaning செலவுகள், காப்புறுதி,என்பவற்றுடன் லாபம் என்பவற்றை கணக்கிட்டே விலைகளைக் குறிக்கின்றன.
இப்படியான பல செலவுகள் பெரிய தொடர் நிரப்பு நிலையங்கள் - chains 7/11, Shell, Caltex. Ampol BP என்பவற்றுக்கு அதிகம் என்பதால் அப்படியான நிலையங்களில் விலை எப்போதும் அதிகமாகவே இருப்பதைப்பாரக்கலாம். சிறிய, தனியார் நிரப்பு நிலையங்களின் இடவசதி மற்றும் overhead என்ற செலவுகள் குறைவு என்ற காரணத்தால் ஒப்பீட்டு அளவில் அவர்களால் குறைந்த விலைக்கு விற்கமுடிகிறது. அதே நேரத்தில் அவர்கள் பெரிய chain நிலையங்கள் அளவுக்கு லாபமீட்ட முடிவதில்லை. மற்ற நிரப்பு நிலையங்களின் விலைகளை அனுசரித்தே விலைகளை நிரணயிக்கவேண்டிய நிலைமை இரு சாராருக்கும் உள்ளது. விலை குறைவான இடத்தில் நிரப்பவே வாகன ஓட்டிகள் முன்வருவர். ACCC என்ற நுகர்வோருக்கான அமைப்பு பெட்ரோலுக்கான விலையை நிர்ணயிக்கவில்லை. அதாவது பெட்ரோலுக்கு கட்டுப்பாட்டுவிலை ‘price control’ இல்லை. ஆனால் சந்தையிலுள்ள competition என்ற போட்டி நிலைமை, விலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதை ACCC கூர்ந்து அவதானித்தே வருகிறது.அதே நேரத்தில், பல நிரப்பு நிலையங்கள் செறிந்துள்ள இடங்களில் விலை குறைவாகவும் போட்டி அதிகமில்லாத புறநகர்ப்பகுதிகளில் விலை அதிகமாகவும் இருப்பதை நாம் காணலாம்.

சில சிறிய தனியார் நிரப்பு நிலையங்களில் இருக்கும் பெட்ரோல் தரம் குறைவானது என்ரும் சில குறைபட்டுக்கொள்வதுண்டு. ஆனால் அது உண்மையில்லை. ஆஸ்திரேலியாவில் விநியோகிக்கப்படும் பெட்ரோல் சட்டப்படி தரக்கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. ஆகவே சிறிய தனியார் நிரப்பு நிலையங்களில் பெறப்படும் எரிபொருள் எந்தவிதத்திலும் தரத்தில் குறைவானதல்ல. ஆனால் உலக தரத்தில் பாரக்கும்போதும், OECD 38 நாடுகளின் அமைப்பின் மட்டத்தில் பார்க்கும்போதும் நமது பெட்ரோலின் தரம் மிகக் குறைந்தது. 91 Octane regular unleaded என்ற வகை பெட்ரோலைப்பாரத்தால் இதில் மில்லியனுக்கு 150 பாகம் sulphur- கந்தகம் இருக்கிறது. 95/98 Premium unleaded இல் 50ppm sulphur இருக்கிறது. ஐரோப்பா இவ்வகை பெட்ரோலை பத்து வருடங்களுக்கு முன்பே தடைசெய்துவிட்டது. 10 ppm என்பதே ஐரோப்பிய நாடுகளில் உள்ள தரமாகும். இதை 2027 இல் கொண்டுவர அரசு எதிர்பார்க்கிறது. இதற்கிடையே, எதிர்க்கட்சியான தொழிற்கட்சி, தாம் ஆட்சிக்கு வந்தால் 2030 இல் சாலைகளில் ஓடும் வாகனங்களில் 50 சதவீதம் EV வாகனங்களாக - மின்சக்தியால் இயங்கும் வாகனங்களாக இருக்கும் என்று அறிவித்துள்ள நிலையில் 2027 இல் 10 ppm sulphur உள்ள பெட்ரோல் சந்தைக்கு வருமா என்று சொல்வதற்கில்லை.
விலைகளில் வீழ்ச்சி ஏற்படும் வாய்ப்பு உடனடி இல்லை. அடுத்த 4 தொடக்கம் 8 வாரங்களுக்கு இப்போதுள்ள விலைகளில் வீழ்ச்சி ஏற்படும் வாய்ப்பு இல்லை என்றே பொதுவாகக் கருதப்படுகிறது. எதிரவரும் வாரங்களில் விலை அதிகரிப்பதற்கான வாயப்புகளே அதிகம் இருப்பதாக NRMA அமைப்பின் பேச்சாளர் Peter Khoury கூறுகிறார். OPEC அமைப்பிற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் அழுத்தம் கொடுத்துவருகின்ற போதும் OPEC அமைப்பு கச்சா எண்ணெய் உற்பத்தியை குறிப்பிடக் கூடிய அளவில் அதிகரிக்கவில்லை. ஆனால் கச்சா எண்ணெய்க்கான சர்வதேச விலைகளில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பீப்பா 110 டாலர்களுக்கு இதுவரை விற்பனையான கச்சா எண்ணெய் இப்போது 90 டாலர்களாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. இந்த விலை வீழ்ச்சியின் பலனை வாகனமோட்டிகள் பெற பல வாரங்கள் எடுக்கக்கூடும். ரஷ்ய - உக்ரைன் பிரச்சனைகள் தீவிரமடைந்தால் எண்ணெய் விலைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவதானிகள் கருதுகிறார்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
