இலங்கையில் கடந்தவாரம் இடம்பெற்ற Mrs.Sri Lanka அழகு ராணி போட்டியின் போது வெற்றி பெற்ற புஷ்பிகா டி சில்வாவிடம் இருந்து, மேடையிலேயே கிரீடத்தைப் பறித்த Mrs. World கரோலின் ஜுரி தனது கிரீடத்தை துறக்கத் தயார் என அறிவித்துள்ளார்.
கொழும்பில் கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற Mrs.Sri Lanka அழகிப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றவர் புஷ்பிகா டி சில்வா என அறிவிக்கப்பட்டு அவருக்கான கிரீடத்தை Mrs. World கரோலின் ஜுரி சூட்டினார்.
ஆனால் சிறிது நேரத்திலேயே மீண்டும் மேடைக்கு வந்த கரோலின் ஜுரி, வெற்றியாளரான புஷ்பிகா டி சில்வா, திருமணமாகி விவாகரத்து பெற்றமையினால், அந்த கிரீடத்தை அவருக்கு வழங்க முடியாது என அறிவித்ததுடன், மேடையில் வைத்தே புஷ்பிகா டி சில்வாவிற்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தை அகற்றி இரண்டாவதாகத் தெரிவானவருக்கு அணிவித்திருந்தார்.
இதையடுத்து புஷ்பிகா டி சில்வா உடனடியாகவே மேடையிலிருந்து வெளியேறினார்.இச்சம்பவம் குறித்த செய்தியும் காணொளியும் உலகளாவியரீதியில் பேசுபொருளானது.
இந்நிலையில் தான் கணவரைவிட்டு பிரிந்து வாழ்வதாகவும், இதுவரை விவாகரத்து பெறவில்லை எனவும் தெரிவித்த புஷ்பிகா டி சில்வா அதை உறுதிப்படுத்தியதையடுத்து அவரிடமிருந்து பறிக்கப்பட்ட கிரீடம் அவருக்கே மீண்டும் வழங்கப்பட்டது.
இருந்தபோதிலும் விழா மேடையில்வைத்து தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் வன்முறையைப் பிரயோகித்து தனது கிரீடத்தை அகற்றியதாகவும் புஷ்பிகா டி சில்வா பொலிஸாரிடம் முறையிட்டிருந்தார்.
இந்த முறைபாட்டை அடிப்படையாகக் கொண்டு, கரோலின் ஜுரி மற்றும் மேடையிலிருந்த மற்றுமொரு நபரான சூலா பத்மேந்திர ஆகியோர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்தப்பின்னணியில் நேற்றையதினம் சமூக வலைத்தளத்தில் கருத்துவெளியிட்டுள்ள கரோலின் ஜுரி, தனது செயற்பாடு எவருடைய மனதையேனும் காயப்படுத்தியிருந்தால் அதற்காகத் தான் வருந்துவதாகவும் 2020ம் ஆண்டு Mrs. World போட்டியில் வென்றதற்காக தனக்குச் சூட்டப்பட்ட கிரீடத்தைத் துறப்பதற்கு தான் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
