SKIP TO MAIN CONTENT

பிரியா-நடேஸ் குடும்பத்தை விரைவில் Biloela-இல் வாழ அனுமதிக்குமாறு வலியுறுத்தல்!

ஆஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டநிலையில், நாடுகடத்தலுக்கெதிராக நீண்ட சட்டப்போராட்டத்தை மேற்கொண்டுவந்த பிரியா-நடேஸ் குடும்பத்தினர் விரைவில் Biloela-இல் வாழ்வதற்கு அனுப்பிவைக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது.

The Murugappan family - father Nades, mother Priya, and daughters Kopika and Tharnicaa - in a photo shared by supporters.
The Murugappan family - father Nades, mother Priya, and daughters Kopika and Tharnicaa - in a photo shared by supporters. Source: AAP Images

3 min read

Published


Skip to article content

சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு குயின்ஸ்லாந்தின்  Biloela பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு, குடிவரவு தடுப்புமுகாமிற்கு கொண்டுசெல்லப்பட்ட பிரியா-நடேஸ் குடும்பம் தொடர்ச்சியாக சட்டப்போராட்டத்தை மேற்கொண்டுவந்தது.

லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிரியா-நடேஸ் குடும்பம் Biloela-இல் வாழ அனுமதிக்கப்படுவர் என வாக்குறுதி வழங்கப்பட்டிருந்த நிலையில், இதனை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு  இக்குடும்பத்தின் விடுதலைக்காக தொடர்ச்சியாகப் போராடிய Home to Bilo அங்கத்தவர்கள் கோரியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது பெர்த்தில் சமூகத்தடுப்புமுகாமில் வாழ்ந்துவரும் இக்குடும்பம், முடிந்தவரை விரைவில் Biloela-இல் குடியமர்த்தப்பட வேண்டும் எனத் தான் விரும்புவதாகவும், இவ்வாரம் இதுகுறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் புதிதாக பொறுப்பேற்றுள்ள கருவூலக்காப்பாளர்-Treasurer Jim Chalmers  தெரிவித்துள்ளார்.

பிரிஸ்பேனில் ABC வானொலிக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரியா-நடேஸ் தம்பதியின் இரண்டாவது மகள் தருணிகாவின் ஐந்தாவது பிறந்ததினம் ஜுன் 12ம் திகதி வருகின்ற பின்னணியில், அதற்கிடையில் இக்குடும்பம் Biloela-இல்  குடியமர்த்தப்பட வேண்டுமென Home to Bilo அங்கத்தவர்கள் கோரியுள்ளனர்.

இதேவேளை பிரியா-நடேஸ் குடும்பம் கடந்துவந்த பாதை கீழே தரப்பட்டுள்ளது.

பிரியா- நடேஸ் குடும்பத்தின் பின்னணி

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் ஆஸ்திரேலியா வந்தடைந்தனர்.

நடேசலிங்கம் மற்றும் பிரியாவின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட அதேநேரம் இவர்களுக்கு வழங்கப்பட்ட bridging விசாவும் 2018 ஆரம்பத்துடன் காலாவதியாகிவிட, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை இறங்கியது.

2018 மார்ச் மாதம் இக்குடும்பம் பல காலமாக வாழ்ந்துவந்த குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து அவர்களை பலவந்தமாக அழைத்துச்சென்று நாடுகடத்த முற்பட்ட வேளையில் சட்டநடவடிக்கை காரணமாக அம்முயற்சி இறுதிநேரத்தில் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மெல்பன் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.

இதையடுத்து நடேசலிங்கம்-பிரியா குடும்பம், நாடுகடத்தப்படக்கூடாதென வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2018 ஜுன் 21 அன்று மெல்பன் பெடரல் circuit நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மீண்டும் இக்குடும்பத்தை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய குடிவரவுத்துறை அதற்கான கடிதத்தையும் தீர்ப்பு வெளியான அடுத்தநாளே கையளித்தது. ஆனால் நீதிமன்றின் தீர்ப்பிற்கெதிராக நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மேன்முறையீடு செய்திருந்ததால் குறித்த குடும்பம் நாடுகடத்தப்படுவது இரண்டாவது தடவையாகவும் தடுக்கப்பட்டது.

ஆனால் இக்குடும்பத்தின் மேன்முறையீட்டு மனுவை 2018 டிசம்பர் 21ம் திகதி விசாரித்த பெடரல் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்ததுடன் இக்குடும்பத்தை நாடுகடத்துமாறும் உத்தரவிட்டிருந்தது. பின்னர் இக்குடும்பம் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தநிலையில் அதுவும் நிராகரிக்கப்பட்டது.

இப்படியாக சுமார் ஒன்றரை வருடங்களாக இக்குடும்பம் மெல்பனிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.

கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தும் நோக்கில் சிறப்பு விமானமொன்று அவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட போதிலும், இறுதி நேரத்தில் குழந்தை தருணிகா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் நீதிமன்றம் கடைசி நிமிட தடை உத்தரவை பிறப்பித்ததைத் தொடர்ந்து விமானம் டார்வினில் தரையிறங்கிய போது குடும்பம் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டு பின்னர் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து தருணிகாவின் பாதுகாப்பு குறித்தும், தருணிகாவின் சூழ்நிலைகளை உள்துறை அமைச்சர் மதிப்பீடு செய்திருக்க வேண்டுமா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், பிரதான விண்ணப்பதாரியான தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இவ்விசாரணை முடியும் வரை அவர் நாடுகடத்தப்படக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

தருணிகா குழந்தை என்பதால் அவரிடமிருந்து பெற்றோரை தனியாகப்பிரித்து நாடுகடத்தமுடியாது என்பதால் முழுக்குடும்பமும் நாடுகடத்தலிலிருந்து தப்பித்து தொடர்ந்தும் சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now