பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கை மாணவர் நிசாம்தீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆஸ்திரேலிய பொலீஸார் வாபஸ் பெற்றுக்கொண்டபோதும் தமது விசாரணைகளை வேறு திசையில் முன்னெடுப்பதில் அவர்கள் மும்முரமாக உள்ளார்கள் என்றும் அதன் பிரகாரம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் ஒருவரின் சகோதரரின் வீடு கடந்த வாரம் தேடுதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்றும் Daily Telegraph ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வேலைசெய்த இலங்கை மாணவர் நிசாம்தீனின் பணியிட அலுவலகத்தின் மேசை லாச்சியிலிருந்து எடுக்கப்பட்ட நோட் புத்தகம் ஒன்றில், ஆஸ்திரேலியாவிலுள்ள முக்கிய இடங்களில் தாக்குதல்கள் மேற்கொள்வது உட்பட முக்கிய அரசியல் புள்ளிகளை படுகொலை செய்வதற்கும் திட்டமிடப்பட்ட தகவல்கள் எழுதப்பட்டிருந்தன என்று பொலீஸார் முதலில் தெரிவித்திருந்தனர்.
இந்த தகவலின் அடிப்படையில் நிசாம்தீன் கைது செய்யப்பட்டு சிட்னி Goulburn பகுதியில் அமைந்துள்ள அதிஉச்ச பாதுகாப்பு சிறையில் ஒரு மாத காலம் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
ஆனால், கைப்பற்றப்பட்ட நோட் புத்தகத்திலுள்ள தகவல்கள் எதுவுமே நிசாம்தீனின் கையெழுத்தில் அமைந்தவை அல்ல என்பதை நிசாம்தீனும் அவரது தரப்பு சட்டத்தரணிகளும் எடுத்துக்கூறியதை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை பொலீஸார் வாபஸ் பெற்றுக்கொண்டனர். அதற்கு முன்னரே நிசாம்தீன் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே.
அப்படியானால், பிரச்சினைக்குரிய தகவல்கள் அடங்கிய அந்த நோட் புத்தகத்திலுள்ள அந்தக்கையெழுத்துக்கு சொந்தக்காரர் யார் என்பதை கண்டறிவதில் பொலீஸார் மேலதிக விசாரணைகளை தொடர்கின்றனர். சூத்திரதாரியை கண்டுபிடித்து கைது செய்வதற்கு சகல விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறார்கள்.
இந்த விசாரணைகளின் பிரகாரம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் Usman Khawaja-வின் மூத்த சகோதரன் Arsalan Khawaja பெற்றோருடன் தங்கியிருந்த சிட்னி - Westmead வீடு பயங்கரவாத தடுப்பு பொலீஸாரினால் கடந்த வாரம் தேடுதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
இந்த தேடுதலின்போது Arsalan Khawaja கைது செய்யப்படவோ, குற்றச்சாட்டுக்கள் எதுவும் பதிவுசெய்யப்படவோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Arsalan Khawaja நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
