SKIP TO MAIN CONTENT

நீங்கள் கடனட்டை பயன்படுத்துபவரா? எச்சரிக்கை!

Credit cards
Source: AAP

2 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: ABC Australia



Skip to article content

ஆஸ்திரேலியாவில் Credit card-கடனட்டை பாவனையானது பலரையும் personal bankruptcy-தனிநபர் வங்குரோத்து அல்லது திவாலாகும் நிலைக்குத் தள்ளும் முக்கிய காரணியாக மாறிவருவதாக ஆய்வு முடிவு ஒன்று சொல்கிறது.

கன்பரா பல்கலைக்கழகத்தின் விரவுரையாளர் ஒருவர் கடன் கட்ட முடியாமல் நொடித்துப் போன பலரிடம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.

குறிப்பாக ஒருவருக்கு வழங்கக்கூடிய ஆகக்கூடிய credit limit-கடன் வரம்புக்கும் அதிகமான தொகையை வங்கிகள் வழங்குவதாலேயே இச்சிக்கல் எழுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உதாரணமாக ஒரு பொலிஸ் அதிகாரிக்கு ஒன்றரை லட்சம் டொலர்கள் கடனட்டைக் கடன் இருக்கிறது. இது அவரது வருடாந்த சம்பளத்தை விட ஒன்றரை மடங்கு அதிகமாகும்.

இரண்டு மூன்று கடனட்டைகளை வைத்திருக்கும் போது அவற்றின் கடன் வரம்பை வங்கிகள் தொடர்ந்து அதிகரித்ததாகவும், தன்னுடைய சம்பளத்தை வைத்து அதற்கான கட்டணத்தைத் திரும்பச் செலுத்த முடியுமா என்பதை வங்கிகள் கருத்திற்கொள்ளவில்லை எனவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆண்டுக்கு 25,000 டொலர்கள் ஓய்வூதியம் பெறும் பலரது கடனட்டைக் கடன் 85,000 டொலர்கள் வரை உள்ளதாகவும் இவ்வாறு கடன் வரம்பை வங்கிகள் அதிகரித்துக் கொடுப்பது சட்டத்திற்குப் புறம்பானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தவிர கடனட்டைப் பாவனைக்குள் தமது வாடிக்கையாளர்கள் பலரை வங்கிகள் வலுக்கட்டாயமாக இழுத்து விடுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதாவது ஒருவர் வீட்டுக் கடன் பெறும் போது கூடவே 23,000 டொலர்கள் வரை பயன்படுத்தக்கூடிய கடனட்டையையும் வங்கிகள் கொடுப்பதாகவும், இது தாம் கேட்காமலே தம்மீது திணிக்கப்படும் கடன் எனவும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் மாதாந்தம் வீட்டுக்கடனைத் திரும்பச் செலுத்துவதில் சிக்கல் எழும்போது இக்கடன் அட்டைகளைப் பயன்படுத்துமாறு வங்கிகள் அறிவுறுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படியாக தனது வீட்டுக்கான மாதாந்த கொடுப்பனவைச் செலுத்துவதற்கு கடனட்டையைப் பயன்படுத்திய மேரி என்ற பெண் வங்குரோத்து நிலைக்குச் சென்று வீட்டையும் இழந்து கடனட்டைக் கடனும் செலுத்த முடியாமல் நண்பர்களுடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதேவேளை வாரமொன்றுக்கு 1லட்சம் வரை கடனட்டைக் கடன் உள்ள ஒருவர் தம்மைத் தொடர்பு கொள்வதாக Consumer legal service தெரிவித்துள்ளது.   

எனவே வீட்டுக்கடன் பெறும் போது கூடவே கடனட்டை தரப்படுகின்ற சந்தர்ப்பங்களிலும் கடனட்டை வரம்பை அதிகரிப்பதற்கான அழைப்பு வங்கிகளிடமிருந்து வரும்போதும் மிகவும் அவதானமாக சிந்தித்து செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now