Credit Cards-கடனட்டைகளைப் பயன்படுத்தி விமானப் பயணச் சீட்டுக்கள், சினிமா மற்றும் கால்பந்து போட்டிக்கான நுழைவுச்சீட்டுக்கள், மற்றும் பொருட்களை வாங்கும் போது Surcharges எனப்படும் மேலதிக கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம்.
ஆனால் செப்டம்பர் 1 முதல் ஆஸ்திரேலியாவின் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் EFTPOS, MasterCard, Visa, American Express card ஆகியவற்றைப் பயன்படுத்தி, நாம் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போதோ அல்லது வேறு தேவைகளுக்காக இவற்றைப் பயன்படுத்தும் போதோ Surcharges எனப்படும் மேலதிக கட்டணத்தை அளவுக்கதிகமாக அறவிட முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
2016 செப்டம்பர் 1 முதல் ஆண்டொன்றுக்கு 25மில்லியன் வருமானமீட்டும் பெரிய நிறுவனங்கள் தம்முடைய விருப்பத்திற்கு Surcharges அறவிட முடியாதெனவும், Australian Competition and Consumer Commission (ACCC)ஆல் நியமிக்கப்பட்ட வரையறைக்குட்பட்டே இதனை அறவிட முடியுமெனவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2017 செப்டம்பர் 1 முதல் இது அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வாடிக்கையாளர்கள் தாம் பயன்படுத்தும் கடனட்டையைப் பொறுத்து 1-3 சதவீதங்களுக்கு அதிகமாக Surcharges செலுத்த வேண்டியிருக்காது என குறிப்பிடப்படுகின்றது.
ஆஸ்திரேலியாவிலுள்ள ஏதாவதொரு நிறுவனம் உங்களிடம் அதிகமாக Surcharges வசூலித்துவிட்டதாக நீங்கள் கருதினால் முதலில் சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்திடம் இது தொடர்பில் கேள்வியெழுப்பலாம். அல்லது Australian Competition and Consumer Commission (ACCC)இடம் முறையிடலாம்.
