உலக வங்கியின் தரவுகளின்படி ஆஸ்திரேலியர்கள் வருடமொன்றுக்கு 7 பில்லியன் டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர்.
ஆனால் பணம் அனுப்புவதற்கான கட்டணம் மற்றும் நாணய மாற்று விகிதம் ஆகியவற்றில் பல மில்லியன் டொலர்களை மக்கள் இழப்பதாகவும் உலகவங்கி குறிப்பிடுகிறது.
நம்மில் பலர் தாய்நாட்டிலிருக்கும் உறவுகளுக்கு பணம் அனுப்பும் போது யார் ஊடாக அனுப்பினால் நாணய மாற்று வீதம் அதிகமாக இருக்கும் என்று யோசிப்போம். இன்னும் சிலர் அதைப்பற்றி சிந்தித்துப் பார்க்காமல் அகப்படுகின்ற ஏதோ ஒரு வழி ஊடாக அனுப்பி விடுவோம். ஆனால் சில விடயங்களில் கவனம் செலுத்தினால் பணம் அனுப்பும் விடயத்தில் நாம் ஏமாந்து போகாமல் இருக்கலாம்.
1. எப்போதும் பணம் அனுப்புவதற்கு முதல் உலக வங்கியின் Global Comparison இணையத்தளத்தைப் பார்வையிடுங்கள். இதில் பணப்பரிவர்த்தனை செய்யும் முக்கியமான நிறுவனங்களுக்கிடையிலான ஒப்பீடு உங்களுக்கு கிடைக்கும். இதை அடிப்படையாக வைத்து யாருக்கூடாக அனுப்பினால் அதிக லாபம் கிடைக்கும் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்.
2. நீங்கள் பணம் அனுப்பும் நிறுவனத்தின் இணையத்திலுள்ள நாணயமாற்று விகிதத்தை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இதில் இரண்டு வகை உள்ளது. ஒன்று வங்கிகளுக்கான தொகை- Interbank rate, மற்றையது வாடிக்கையாளர்களுக்கானது-Customer rate. எனவே நீங்கள் வங்கிகளுக்கான தொகையைப் பார்த்து ஏமாந்துவிடவேண்டாம்.
3. பணம் அனுப்பும் நீங்களும் யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவரும் வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது நல்லது. இதன்மூலம் வங்கிகள் ஊடான பல்வேறுபட்ட பணப்பரிமாற்ற சேவைகளைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும்.
4. அடிக்கடி சிறிய தொகைகளை அனுப்புவதற்குப் பதிலாக ஓரிரு தடவைகளில் பெரிய தொகைகளை அனுப்பலாம். அப்போது அதிகளவான நாணய மாற்று விகிதம் கிடைப்பதுடன் பணம் அனுப்புவதற்கான கட்டணமும் சில வேளைகளில் குறைக்கப்படலாம் அல்லது நீக்கப்படலாம்.
5. எப்போதும் ஒரு நிறுவனமூடாக பணம் அனுப்ப முதல் ஏனைய பணப்பரிமாற்ற நிறுவனங்களுடனும் தொடர்பு கொண்டு அன்றைய நாணய மாற்று நிலவரத்தை அறிந்து கொண்டு அதன் பின்னர் பணத்தை அனுப்புங்கள்.