ஆஸ்திரேலியாவில் Shift workers எனப்படும் நாளொன்றுக்கு நீண்ட நேரம் பணிபுரியும் தொழிலாளர்கள் சாதாரண தொழிலாளர்களைவிடவும் அதிகளவான sick/ personal விடுப்புக்கு தகுதியுள்ளவர்கள் என ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் அமைப்பு (Australian Workers Union) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் Fair Work Ombudsman-க்கு எதிராக தொழிலாளர்கள் அமைப்பு போர் தொடுத்துள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள ஆஸ்திரேலிய தொழில்முறை சட்டத்தின்படி நிரந்தர - முழுநேர - தொழிலாளர் ஒருவருக்கு அவரை பணிக்கு அமர்த்துகின்ற நிறுவனம் 76 மணி நேரத்தை வருடமொன்றுக்கு sick leave/personal leave என்ற பகுதியின் கீழ் உவந்தளிக்கிறது.இது அந்த நிறுவனங்கள் கடைப்பிடிக்கவேண்டிய சட்டமும்கூட.
சில நிறுவனங்கள் தொழிலாளர்களின் நலன் கருதி அல்லது வேறு காரணங்களின் அடிப்படையில் சில மணி நேரங்களை இந்த sick leave/ personal leave பகுதியில் அதிகமாக வழங்குவதும் உண்டும்.
ஆனால், தற்போது ஆஸ்திரேலிய தொழிலாளர் அமைப்பு தொழிலாளர்களின் நலன் கருதிய வாதத்தை முன்வைத்திருக்கிறது.
அதாவது, Shift workers எனப்படும் நாளொன்றுக்கு நீண்ட நேரம் - 10 /12 மணிநேரம் - பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் 7.6 மணி நேரத்தின் அடிப்படையில் வருடமொன்றுக்கு 76 மணி நேரத்தை sick leave/ personal leave பகுதியில் தொழில் நிறுவனங்கள் வழங்குவது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது. Shift work செய்கின்ற தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிபுரிகின்ற நேரத்திற்கு ஏற்றவாறு sick leave/ personal leave வழங்கவேண்டும் என்று ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தொழிலாளர் ஒருவர் நாளொன்றுக்கு 12 மணிநேரம் பணிபுரிகிறார் என்றால் அவருக்குரிய sick leave/ personal leave வருடம் ஒன்றுக்கான 120 மணி நேரமாக கணக்கிடப்பட்டு வழங்கப்படவேண்டும் என ஆஸ்திரேலிய தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுவரை காலமும் Fair Work Ombudsman இந்த விடயத்தில் பிழையான வழிகாட்டுதல்களை கொடுத்திருக்கிறது என்றும் ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் அமைப்பு கூறியுள்ளது.
ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் அமைப்பின் உத்தியோகபூர்வ வழக்காக Fair Work Commission முன்னிலையில் இது பதிவாகியிருக்கிறது. பல தரப்பட்ட தொழிலாளர் அமைப்புக்களும் இந்த விவகாரத்துக்கு தங்களது ஆதரவை வழங்கியிருக்கின்றன.
இந்த வழக்கு வெற்றிபெற்றால், லட்சக்கணக்கான shift work தொழிலாளர்களுக்கான முன்னைய பணத்தையும் தொழில் நிறுவனங்கள் செலுத்தவேண்டிவரும் என்கிறார்கள் தொழில்துறை ஆய்வு நிபுணர்கள்.
