ஆஸ்திரேலிய அதிஷ்டலாபச்சீட்டு வரலாற்றில் மிகப்பெரிய தனிநபர் வெற்றித்தொகையான நூறு மில்லியன்களை சிட்னியை சேர்ந்த பெண்ணொருவர் வெற்றிபெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த இந்த வெற்றிச்செய்தி நேற்றிரவு வெளியானது.
சிட்னியை சேர்ந்த இளம் தாயாரன இவர் வழக்கமாக அதிஷ்ட லாபச்சீட்டுக்களை வாங்குபவர் என்றும் குறிப்பிட்ட வெற்றிச்சீட்டினை அவர் இணையத்தில் பதிவு செய்து வாங்கியிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் 80 மில்லியனாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த வெற்றித்தொகை கடந்த வாரம் குலுக்கலில் இடம்பெற்ற தொழில்நுட்ப கோளாறு காரணமாக நூறு மில்லியன்களாக அதிகரிக்கப்பட்டது. இதன்பிரகாரம், நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட குலுக்கலில் சிட்னியை சேர்ந்த குறித்த பெண் அதிஷ்ட எண்களுக்குரியவராக அடையாளம் காணப்பட்டார்.
Lott நிறுவனம் நேரடியாக அவரை தொடர்பு கொண்டு வெற்றிச்செய்தியை கூறியபோது, முதலில் அவர் அதனை நம்பவில்லை. முதலில், தனது வெற்றித்தொகை '107 ஆயிரம் டொலர்களா" என்று கேட்டு மகிழ்ச்சி தெரிவித்தார் என்றும் "இல்லை, நீங்கள் வெற்றிபெற்றிருப்பது 107 மில்லியன் டொலர்கள்" - என்று கூறியபோது நம்ப முடியாத ஆச்சரியத்தில் அவர் குதூகலிக்கத்தொடங்கிவிட்டார் என்றும் Lott நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிட்னியில் சுகாதாரத்துறை சார்ந்த தொழிலில் உள்ள குறிப்பிட்ட வெற்றிப்பெண்மணி, இந்தப்பெரும் தொகையை வெற்றிபெற்றதற்காக தான் வேலையிலிருந்து ஓய்வுபெற்றுவிடப்போவதில்லை என்றும் தான் பணிபுரியும் துறை தனக்கு ஆத்ம திருப்தியை தருவது என்றும் அதனால் தொடர்ந்து வேலை செய்துகொண்டு தனக்கு கிடைத்த வெற்றித்தொகையை தனது குடும்பத்தோடும் சிறு தொகையை தொண்டு நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளவுள்ளதாக கூறியுள்ளார். தான் இந்த அதிஷ்ட லாபச்சீட்டை பதிவு செய்யும்போது தனது குடும்பத்தினை நினைவில்வைத்துக்கொண்டுதான் அதனை வாங்கியதாகவும் கூறியுள்ளார்.
