சுவீடனிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு தஞ்சக்கோரிக்கையாளர் ஒருவர் விமானம் மூலம் நாடு கடத்தப்படவிருந்தமைக்கு எதிராக சுவீடன் பெண் ஒருவர் விமானத்திற்குள் மேற்கொண்ட அமைதிப் போராட்டமானது இணையவெளியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த வாரம் இடம்பெற்ற இந்த சம்பவத்தை, ஆர்ப்பாட்டம் செய்த குறிப்பிட்ட சுவீடன் பெண்மணி நேரடியாக சமூக வலைத்தளத்தில் ஒளிபரப்பியதால் இதுவரை அந்த காணொளி ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. அகதிகள் நல அமைப்புக்கள் குறிப்பிட்ட பெண்ணை மனித உரிமைகளுக்காக துணிச்சலோடு போராடிய வீராங்கனை என்று வர்ணித்துள்ளார்கள்.
கடந்தவாரம் சுவீடனிலிருந்து இஸ்தான்புல் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு தஞ்சக்கோரிக்கையாளர் ஒருவர் நாடுகடத்தப்படவிருந்தார். 52 வயதான இந்த தஞ்சக்கோரிக்கையாளர் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவரது உயிருக்கு ஆபத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டபோதும் அவரை திருப்பி அனுப்புவதில் அதிகாரிகள் தரப்பு உறுதியாவிருந்தது.
அவர்களது ஏற்பாட்டின்பிரகாரம், விமானத்தின் மூலம் அவரைக்கொண்டு செல்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அவர் விமானத்திற்குள் ஏற்றப்பட்டிருந்த நேரத்தில், அங்கு பயணியாக வந்த 21 சுவீடன் பெண்மணி Elin Ersson அவரை நாடுகடத்தும் நடவடிக்கைக்கு எதிராக விமானத்துக்குள் எழுந்து நின்று அமைதிப்போராட்டத்தை நடத்தியுள்ளார். கூடவே, தனது போராட்டம் குறித்து நேரடியாக சமூக வலைத்தளத்தில் ஒளிபரப்பியுள்ளார். இதனால் விமானத்துக்குள் பதற்றம் ஏற்பட்டது.
சிறிது நேரத்தில், குறிப்பிட்ட சுவீடன் பெண்மணியும் ஆப்கான் தஞ்சக்கோரிக்கையாளரும் கூடவே விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர். பின்னர், திட்டமிட்டபடி விமானம் கிளம்பிச்சென்றுவிட்டது.
தற்போது குறிப்பிட்ட தஞ்சக்கோரிக்கையாளரை நாடுகடத்தும் திட்டம் தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட சுவீடன் பெண்மணிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக அபராதமோ அல்லது ஆறு மாதம் வரையிலான சிறைத்தண்டனையோ தீர்ப்பாக வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
