ஆஸ்திரேலியாவில் அகதி தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்படும் போது, அவர்களை விமானத்தில் ஏற்றுவதற்கு Qantas மற்றும் Virgin விமான நிறுவனங்கள் மறுப்பு வெளியிட வேண்டுமென்ற அழுத்தங்கள் வலுத்துவருகின்றன.
உலகெங்குமுள்ள பல விமான நிறுவனங்கள் நாடுகடத்தப்படும் புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றுவதற்கு மறுப்பு வெளியிட்டுவரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் இவ்விரு முக்கிய விமானநிறுவனங்களும் அதைப் பின்பற்ற வேண்டுமென அகதிகள் செயற்பாட்டாளர்கள், தொழிலாளர் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.
லண்டனில் சட்டவிரோத குடியேறிகள் என அழைக்கப்படுபவர்களை நாடுகடத்தும் செயற்பாட்டிற்கு தமது நிறுவனம் துணைபோகாது என கடந்த ஜுன் மாதம் Virgin Atlantic அறிவித்திருந்தது.
அதேபோல் அமெரிக்காவின் American, Frontier, Southwest, United airlines விமான நிறுவனங்கள் 'zero tolerance' கொள்கையின் கீழ் குடும்பங்களிடமிருந்து பிரிக்கப்படும் சிறுவர்களை தமது விமானத்தில் ஏற்றமாட்டோம் என அறிவித்திருந்த அதேநேரம், ஜேர்மனியின் தேசிய விமான நிறுவனமான Lufthansa, நாடுகடத்தப்படும் புகலிடக்கோரிக்கையாளர்களுடன் பறப்பதற்கு மறுப்பு வெளியிட்டுவந்தது.
இதேபோல புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் நாடுகடத்தப்படும் போது, அவர் தனது நாட்டில் ஆபத்தை எதிர்கொள்வார் என்பதால் அவரை ஏற்றுவதற்கு Qantas, Virgin ஆகிய விமான நிறுவனங்கள் சம்மதிக்ககூடாது என வலியுறுத்தும் கடிதம் ஒன்று 60-க்கும் மேற்பட்ட மனித உரிமை அமைப்புகள், தொழிற்சங்கங்கள், அகதிகள் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் போன்றவற்றின் கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் நாடுகடத்தல் செயற்பாட்டிற்கு தமது நிறுவனங்கள் துணைபோகாது என்று தெரிவிக்க இவ்விரு நிறுவனங்களும் மறுப்பு வெளியிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் குடியேற்ற சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயற்படவேண்டிய கடப்பாடு தமக்கு உள்ளதாக Virgin தெரிவித்துள்ள அதேநேரம், இவ்விடயத்தில் தீர்மானம் எடுப்பது நீதிமன்றங்களும் அரசுக்களுமே தவிர விமான நிறுவனங்கள் அல்லவென Qantas தெரிவித்துள்ளது.
இதேவேளை ஆஸ்திரேலிய அரசு, தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்துவதற்கு Qantas, Virgin போன்ற விமான நிறுவனங்களைப் பயன்படுத்தும் அதேநேரம், இதற்கு மேலதிகமாக சுமார் 1 லட்சம் டொலர்கள் செலவு செய்து நாடுகடத்தலுக்கென பிரத்தியேகமாக வாடகை விமானங்களையும் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
