நவுறு தீவிலுள்ள அகதியை மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவருவது தொடர்பாக நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஆஸ்திரேலியாவை நோக்கி மீண்டும் படகுகள் வருவதற்கு மிகப்பெரிய உந்துதலாக இருக்கப்போகிறது என்று உள்துறை அமைச்சர் Peter Dutton அச்சம் தெரிவித்துள்ளார்.
நவுறு தீவிலுள்ள ஈராக்கிய அகதியின் மருத்துவ தேவைக்காக அவரை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவருவதற்கு தடைபோட்ட உள்துறை அமைச்சின் முடிவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளதை அடுத்து அந்த முடிவு குறித்து கருத்து கூறும்போதே Peter Dutton மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நவுறு - மனுஸ் தீவு அகதிகள் ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கான கதவுகளை திறந்துள்ளது. இது சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்துபவர்களுக்கு இனிப்பான செய்தியை வழங்கியிருக்கிறது. இந்த விடயத்தில் மேலோட்டமாக கருத்து கூறுபவர்கள் ஒன்றை விளங்கிக்கொள்ளவேண்டும். அதாவது, சட்டவிரோதமாக அகதிகளை அழைத்துவருபவர்கள் மேன்மையான குணங்கொண்டவர்கள் அல்லர். அவர்கள் திட்டமிட்ட சட்டவிரோத காரியங்களை செய்கின்ற குற்றவாளிகள். அவர்கள் எப்பேற்பட்ட செய்தியையும் திரிபுபடுத்தி தங்களை நம்பிவருபவர்களிடம் கூறி, பணம் பறித்துக்கொண்டு, அப்பாவி மக்களை கடத்திவந்து ஆபத்தில் தள்ளிவிடுகிறார்கள். இதைப்புரிந்துகொள்ளாமல் நாங்கள் தொடர்ந்தும் எமது எல்லைப்பாதுகாப்பில் நெகிழ்ச்சிப்போக்கினை கடைப்பிடிக்க முடியாது - என்று Peter Dutton தெரிவித்துள்ளார்.
தற்போது நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பின் பின்னர், மருத்துவ இடமாற்றத்திற்கான அனுமதி நிராகரிக்கப்பட்டவர்கள் அத்தீர்மானத்திற்கெதிராக மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் தற்போது எழுந்துள்ளதாக அமைச்சர் Peter Dutton கவலை தெரிவித்துள்ளார்.
Share
