லிபரல் அரசாங்கம் நிறைவேற்றியிருக்கும் நிதிநிலை அறிக்கைக்கும் பிரதமர் Scott Morrison-க்கும் தொடர்ந்தும் மக்களாதரவு உள்ளபோதும் லேபர் கட்சி தலைமையிலான ஆட்சி அமையவேண்டும் என்பதையே மக்கள் விரும்புகிறார்கள் என்று நிதிநிலை அறிக்கைக்கு பின்னர் மேற்கொண்ட முக்கியமான மக்கள் கருத்துக்கணிப்பில் தெரியவந்திருக்கிறது.
Ipsos அமைப்பு சுமார் ஆயிரத்து இருநூறு பேர் மத்தியில் அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்பட்ட பின்னர், கடந்த ஏப்ரல் 3ம் திகதிக்கும் 6ம் திகதிக்கும் இடையில் மேற்கொண்ட கருத்துணிப்பிலேயே இந்த முடிவு தெரியவந்திருக்கிறது.
இந்த கருத்துக்கணிப்பில் பங்கெடுத்துக்கொண்டவர்களில் 41 வீதமானவர்கள் நிதிநிலை அறிக்கை பரவாயில்லை என்றே பதில் கூறியிருக்கிறார்கள். 29 வீதமானவர்கள்தான் பயனற்ற நிதிநிலை அறிக்கை என்று கூறியுள்ளார்கள்.
தலைமைத்துவம் தொடர்பாக தற்போதைய பிரதமர் Scott Morrison-க்கும் எதிர்க்கட்சி தலைவர் Bill Shorten-க்கும் இடையில் கேட்கப்பட்ட தெரிவுக்கேள்விக்கு அதிகப்படியானவர்கள் Scott Morrison-ஐ விருப்பத்துக்குரிய தலைவராக கூறியுள்ளனர். இருவருக்கும் இடையிலான விருப்பு வாக்கு வீதம் 46-35 என்ற வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருகட்சி அடிப்படையில் கூட்டணி அரசை விடவும் லேபர் கட்சி 52-48 என முன்னிலை வகிக்கின்றபோதும் கடந்த கருத்துக்கணிப்பைவிடவும் கூட்டணி அரசு 2 புள்ளிகள் முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
