ஆஸ்திரேலியாவின் வங்கிகள், கடன் வழங்கும் நிறுவனங்கள், காப்புறுதி கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றின் நிதிப்பரிவர்த்தனைகள் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு வசதியாக அரசினால் புதிதாக அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ள Australian Financial Complaints Authority முறைப்பாட்டு தொலைபேசிச்சேவை வழியாக முதல் மாதத்தில் மாத்திரம் 13 ஆயிரம் அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அரசாங்கத்தினால் கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட றோயல் கமிஷன் விசாரணைக்குழு முன்னிலையில் முன்னணி வங்கிகள் உட்பட பல்வேறு நிதி வழங்கும் நிறுவனங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.
குறித்த விசாரணைக்குழுவின் 69 அமர்வுகளில் 134 சாட்சியங்களின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட ஏழு சுற்று விசாரணைகளை அடிப்படையாக வைத்து சுமார் 6500 பக்க அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதிலிருந்து பல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இதன் பிரகாரம், வங்கிகள் மீதான நம்பிக்கையை பொதுமக்களுக்கு மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு தேசிய ரீதியில் தொலைபேசி சேவை ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்திருந்தது.
இந்த சேவையூடாக நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட 13 ஆயிரம் அழைப்புக்களில் பெரும்பாலானவை கடன் தொடர்பானவை என்றும் அதைத்தொடர்ந்து காப்புறுதி நிராகரிக்கப்பட்ட முறைப்பாடுகள் உட்பல பல விடயம் சார்ந்தவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
