தனது வளர்ப்பு நாய்களை அடித்த நபர் மீது தாக்குதல் நடத்திய ஆஸ்திரேலியரை Bali நீதிமன்றம் சிறையில் அடைத்துள்ளது.
குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டரை வருட சிறைத்தண்டனை கிடைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
47 வயதான Michael David Sode என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் உள்ளவர் ஆவார்.
இந்தோனேஷியாவின் பிரபல சுற்றுலா நகரான உபுட் பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு ஆஸ்திரேலிய பிரஜையான Michael David Sode தனது வளர்ப்பு நாய்களுடன் சென்றுள்ளார். அங்கு இவரது வளர்ப்பு நாய்கள் தேநீரகத்திலிருந்த கதிரைகளின் மீது சிறுநீர் கழித்துள்ளன. இதனைக்கண்ட கடை உரிமையாளர் நாய்களின் உரிமையாளரான ஆஸ்திரேலிய பிரஜையிடம் முறையிட்டிருக்கிறார். அந்த அழுக்கை கழுவிக்கொள்ளலாம் என்று நாய்களின் உரிமையாளர் ஆலோசனை கூறியுள்ளார். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவரது இன்னொரு நாய் ஓடிச்சென்று அங்கு வாடிக்கையாளர்களுக்கு வெட்டிக்கொடுப்பதற்கு வைக்கப்பட்டிருந்த இளநீர் குலைமீதும் சிறுநீர் கழித்துள்ளது. கோபமடைந்த கடை உரிமையாளர் அங்கிருந்த கதிரையொன்றினால் அந்த நாயை அடித்து துரத்தியுள்ளார். தனது நாய் மீது தாக்குதல் நடத்தியதால் கோபமடைந்த ஆஸ்திரேலிய பிரஜை கடை உரிமையாளரின் முகத்தில் தாக்கியுள்ளார். தாக்குதலில் வாய் உடைந்து மூன்று தையல்கள் போடுமளளவுக்கு கடை உரிமையாளருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கடந்த சிலவாரங்களாக விசாரணைகளை மேற்கொண்டுவந்த உபுட் பொலீஸார் தற்போது குறிப்பிட்ட ஆஸ்திரேலிய பிரஜையை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.
