நியூசிலாந்திலுள்ள இரண்டு மசூதிக்களில் இன்று மதியம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Christchurch-இலுள்ள Al Noor மசூதியில் இன்று மதியம் 1.45 மணிக்கு இராணுவ சீருடை போன்ற உடையணிந்த துப்பாக்கிதாரி சரமாரியாக துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாகவும் அதைத் தொடர்ந்து Linwood மசூதியில் இரண்டாவது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
குறித்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட நால்வரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாகவும் வேறு ஆயுததாரிகளும் இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
இதையடுத்து நியூசிலாந்து முழுவதுமுள்ள மசூதிகளிலிருந்து பொதுமக்களை விலகியிருக்குமாறும் மறுஅறிவித்தல் வரை மசூதிகளுக்குச் செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்விரு தாக்குதல்களிலும் சுமார் 40 பேர்வரை கொல்லப்பட்டதாகவும், இத்தாக்குதல்களை மேற்கொண்டவர்களில் ஒருவர் 28 வயதான ஆஸ்திரேலியாவில் பிறந்த வெள்ளையினத்தவர் எனவும், தனது கொலைவெறிச் செயலை சுமார் 17 நிமிடங்கள் அவர் நேரடி ஒளிபரப்புச் செய்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை குறித்த சம்பவங்களில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது உள்ளிட்ட விபரங்களை தற்போது வெளியிடமுடியாதுள்ளதாக தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் Jacinda Arden நியூசிலாந்து வரலாற்றில் இது ஒரு கறுப்பு நாள் என தெரிவித்துள்ளார்.
