கிறைஸ்ட்சேர்ச் மசூதி படுகொலையாளிக்கு எதிராக நியூசிலாந்தில் முதன் முறையாக பயங்கரவாத குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
கிரைஸ்ட்சேர்ச்சில் மார்ச் மாதம் ஆஸ்திரேலிய துப்பாக்கிதாரி மேற்கொண்ட படுகொலைப்படலத்தில் 51 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, குறிப்பிட்ட நபருக்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.
ஆனால், இந்தச்சம்வம் நன்கு திட்டமிடப்பட்டு அப்பாவிப்பொதுமக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இது கொடூரமானதொரு பயங்கரவாத நடவடிக்கை என்று பொலீஸார் நம்புகிறார்கள்.
அத்துடன், நியூசிலாந்து பிரதமரும் சம்பவம் இடம்பெற்ற நாள்முதல், குறிப்பிட்ட சம்பவமானது பயங்கரவாத நடவடிக்கை என்று தொடர்ந்து கூறிவந்தார்.
இந்நிலையில், நியூசிலாந்து நாடாளுமன்றில் 2002 ஆம் ஆண்டு கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட பயங்கரவாத சட்டம் முதன் முதலாக குறிப்பிட்ட துப்பாக்கிதாரிக்கு எதிராக பிரயோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்த பொலீஸார் இந்த தகவலை அவர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.
ஆஸ்திரேலிய துப்பாக்கிதாரி Brenton Tarrant-க்கு எதிராக இதுவரை 51 கொலைக்குற்றச்சாட்டுக்களும் 40 கொலை முயற்சி குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
