ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி பாவனை தொடர்பான சட்டத்தை அரசாங்கம் உடனடியாக மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்றும் நியூசிலாந்தில் மசூதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை ஆஸ்திரேலியாவில் hunters, sport shooters உள்ளிட்டோர் சட்டபூர்வமாக பதிவு செய்து பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையே தற்போதைய சட்டத்தின் கீழ் காணப்படுவதாகவும், துப்பாக்கி பாவனைகளுக்கு எதிரான அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த அமைப்பின் தலைவர் Sam Lee கூறும்போது - துப்பாக்கிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் மிகக்கூர்மையான கவனமும் கரிசனையும் செலுத்தப்படுதல் அவசியமாகும். நாட்டின் பாதுகாப்பும் பொதுமக்களினது பாதுகாப்பும்கூட இதில் அடங்கியிருக்கிறது. நியூசிலாந்தில் மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல் எமக்கு பல்வேறு விடயங்களை தெளிவுபடுத்தியிருக்கிறது. நியூசிலாந்திலுள்ள துப்பாக்கி கட்டுப்பாடு தொடர்பான சட்டம் ஆஸ்திரேலியாவிலும் பார்க்க மென்மையானதாக உள்ளபோதும்கூட, ஆஸ்திரேலியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கடுமையான துப்பாக்கி கட்டுப்பாடுகள் மற்றும் அனுமதி பத்திரம் வழங்கும் படிமுறைகள், காலகாலமாக துப்பாக்கி பயன்படுத்துபவர்களால் மேற்கொள்ளப்பட்ட தொடர் அழுத்தங்கள் மற்றும் கோரிக்கைகளால் மென் நிலையை அடைந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது நடைமுறையிலுள்ள துப்பாக்கி கட்டுப்பாடுகளின் கீழ், பல முக்கியமான துப்பாக்கிகளை சட்டபூர்வமாக பெற்றுக்கொள்ளக்கூடிய உரிமை பலருக்கும் உள்ளது. அது பாரதூரமான சம்பவங்களுக்கு காரணமாகக்கூடிய வாய்ப்பும் உள்ளது- என கூறியுள்ளார்.
ஆகவே, பிரதமர் Scott Morrison நாட்டின் தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு துப்பாக்கி பாவனை தொடர்பான ஒவ்வொரு தொகுதி அனுமதியையும் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும். சட்டங்களை கடுமையாக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
