நியூசிலாந்து நாட்டில் வெளிநாட்டவர்கள் இனி வீடு வாங்க முடியாது என்ற புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஆஸ்திரேலியர்களுக்கு இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படுகின்றது.
நியூசிலாந்து நாட்டில் வீடுகளின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால், உள்ளூர்வாசிகள் வீடுகள் வாங்குவது கனவாக மாறி வருவதாக விமர்சனங்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து, தாம் பதவிக்கு வந்தால் “நியூசிலாந்து விற்பனைக்கல்ல” என்றும், வெளிநாட்டவர் இனி நியூசிலாந்து நாட்டில் வீடு வாங்க முடியாது என்ற புதிய கொள்கையை அறிமுகம் செய்வோம் என்றும், சிறிய கட்சியான New Zealand First, தேர்தல் வேளையில் அறிவித்திருந்தது.
New Zealand First கட்சியால் தனியாக பதவிக்கு வர இயலாதநிலையில், இக்கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசை அமைத்த லேபர் கட்சி, வெளிநாட்டவர் இனி நியூசிலாந்து நாட்டில் வீடு வாங்க முடியாது எனும் புதிய கொள்கையை தமது அரசு 2018ம் ஆண்டு முதல் அறிமுகம் செய்யும் என்று அறிவித்திருந்தது.
லேபர் கூட்டணி அரசு வழங்கிய வாக்குறுதிக்கமைய இப்புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், எனினும் இப்புதிய சட்டம் ஆஸ்திரேலியர்களுக்குப் பொருந்தாது எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
நியூசிலாந்தில் வீடு வாங்கும் வெளிநாட்டவர்களில் சீனர்களுக்கு அடுத்தபடியாக, இரண்டாமிடத்தில் ஆஸ்திரேலியர்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
