நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள அனைத்து அரச முன்பள்ளிகளிலும் அடுத்த வருடம் முதல் கைத்தொலைபேசி பாவனைக்கு தடை கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு ஏற்படுகின்ற கவனச்சிதறல் மாத்திரமல்லாமல் கைத்தொலைபேசிகள் மாணவர்கள் மத்தியிலான வேறு பல சிக்கல்களுக்கும் காரணமாகும் வாய்ப்புள்ளதால் மாநிலம் தழுவிய இந்த தடையை கொண்டுவரவுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ மாநில முதல்வர் Gladys Berejiklian தெரிவித்துள்ளார்.
முன்பள்ளி வகுப்பறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் மாநில அரசு இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதாகவும் இந்த புதிய அறிவிப்பினை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து கல்வித்திணைக்களம் அனைத்துப்பாடசாலைகளுக்கும் முறையான அறிவுறுத்தல்களை அனுப்பிவைக்கும் என்றும் Gladys Berejiklian கூறியுள்ளார்.
பெற்றோர் சிறப்பு அனுமதிகோரும் பட்சத்தில் கைத்தொலைபேசியை பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னரும் கற்றல் நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னரும் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைத்தொலைபேசியானது மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்கு இடையூறாகவும் கவனக்கலைப்பானாகவும் அமைவது மட்டுமல்லாமல், மாணவர்களின் மத்தியிலான இயல்பான பழக்கவழக்கங்களை கெடுக்கிறது என்று Gladys Berejiklian மேலும் தெரிவித்துள்ளார்.
Share
