தனது மகளின் வீட்டில் நாய்கள் குரைத்தபோது அவற்றை மிரட்டிய அயலவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக மெல்பேர்னைச் சேர்ந்த குடும்பஸ்தர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளநிலையில் இவ்வழக்கு விசாரணை மெல்பேர்ன் நீதிமன்றில் நடைபெற்றது.
கடந்த கிறிஸ்மஸ் விடுமுறை காலத்தின்போது மெல்பேர்ன் அல்டோனாவில் இடம்பெற்ற சம்பவத்தில் 49 வயது குடும்பஸ்தர் 26 வயது நபரை சுட்டுக்கொலை செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட குடும்பஸ்தர் கிறிஸ்மஸ் விடுமுறையன்று தனது மகளின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மகளுடன் சேர்ந்து திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தபோது அவர்களது நாய்கள் குரைத்திருக்கின்றன. அதைத்தொடர்ந்து, அயலவர் நாய்களை நோக்கி கெட்ட வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். குறித்த நபர், எப்போதும் தங்களது நாய்களை திட்டுவதாகவும் தன்னை நோக்கி பாலியல் ரீதியான வசைச்சொற்களை பயன்படுத்துவதாகவும் மகள் தகப்பனிடம் கூறியிருக்கிறார்.
உடனடியாக வெளியே சென்ற தந்தை, தனது மகளுடன் தகாத முறையில் நடந்துகொள்ள வேண்டாம் என்று குறிப்பிட்ட அயலவரை எச்சரித்திருக்கிறார். அதற்கு அயலவரோ, தான் போதைப்பொருள் பயன்படுத்துகின்ற மகா பொல்லாதவன் என்றும் அந்த வீட்டு நாய்களையும் அங்கிருப்பவர்களையும் எப்போது என்ன செய்யவேண்டும் என்று தனக்கு தெரியும் என்று பேசியிருக்கிறார்.
இதனால், கோபமடைந்த தந்தை துப்பாக்கியை எடுத்துவந்து குறிப்பிட்ட 26 வயது அயலவர் மீது சுட்டிருக்கிறார். அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்துவிட்டார்.
அதன்பின்னர், தாக்குதல் நடத்திய குடும்பஸ்தர் அந்த இடத்திலிருந்து தப்பியோடுவதற்கு அவரது தாயார் உதவி செய்தார் என்றும் தாயும் மகனும் பின்னர் பொலீஸில் சரணடைந்துகொண்டனர் என்றும் கூறப்படுகிறது. விசாரணை தொடர்ந்தும் நடைபெறுகிறது.
