நியூஸிலாந்தில் அப்பாவிப்பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதல் சம்பவத்தினை அடுத்து ஆஸ்திரேலியாவில் விக்டோரிய மாநிலத்தில் தீவிர வலதுசாரிகள் மீது பொலீஸார் கூர்மையான தமது கண்காணிப்பை வலுப்படுத்தியிருப்பதாக விக்டோரிய பொலீஸாரின் பிரதான ஆணையாளர் Graham Ashton தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு வெள்ளையின தீவிரவாதம் எனப்படும் தீவிர வலதுசாரித்துவ பின்னணியே காரணம் என்பது தாக்குதலாளிகளின் ஊடாகவே தெரியவந்துள்ளதையடுத்து, ஆஸ்திரேலியாவிலும் இதுபோன்ற தீவிர வலதுசாரிக்குழுக்கள் இப்படியான தாக்குதல்களை மேற்கொள்ள நேரிடும் என்ற அச்சம் பல்வேறு தரப்பிலும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
அதேநேரம் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகள் சிலரும் இதற்கு தூபமிடுவதைப்போன்ற கருத்துக்களை வெளியிட்டுவருவதாக கூறப்படும் பின்னணியில் இதற்கு ஏனைய அரசியல்வாதிகள் பலரும் பொதுமக்களும் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான ஒரு நிலையில், விக்டோரியாவில் தீவிர வலதுசாரி கொள்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டங்ளை நடத்துபவர்கள் மற்றும் அது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் வன்முறைகளில் ஈடுபடலாம் என்ற கவனம் தமக்கும் உள்ளது என்றும் இவ்வாறு தாங்கள் சந்தேகிக்கும் நபர்கள் தமது தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் விக்டோரிய பொலீஸ் ஆணையாளர் Graham Ashton தெரிவித்துள்ளார்.
