பொலிவூட் நட்சத்திரம் ஷாருக்கானுக்கு மெல்பேர்ன் La Trobe பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கவுள்ளது.
மெல்பேர்னில் அடுத்தமாதம் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்காக அவர் வருகைதருகின்றபோது இந்த கௌரவிப்பு கடிதம் அவரிடம் கையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நட்சத்திர நடிகராக சுமார் நாற்பது ஆண்டுகளாக கோலோச்சிவரும் ஷாருக்கான், தனது நடிப்பின் ஊடாக ஆற்றிய சேவை மற்றும் அமிலத்தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் - விசேட தேவைக்கு உட்பட்ட சிறுவர்கள் ஆகியோருக்கு வழங்கிய உதவிகள் ஆகியவற்றை கௌரவிக்கும்பொருட்டு அவருக்கு கலாநிதி பட்டம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கௌரவத்தை அளிக்கவுள்ள La Trobe பல்கலைக்கழக துணைவேந்தர் John Dewar இந்த மதிப்பளிப்பு தொடர்பாக கூறும்போது - நடிகர் ஷாருக்கான் இந்தியாவில் மேற்கொண்டுவரும் பெண்கள் தலைமைத்துவத்துக்கான ஆதரவு மற்றும் பல உதவிகள், பல்கலைக்கழகத்தின் விழுமியங்களுடன் மிகவும் நெருக்கமாக உள்ளதாகவும் சமத்துவம் - பன்மைத்துவம் போன்ற விடயங்களில் அவரது முன்னேற்பாடுகள் வரவேற்கப்படவேண்டியவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
1980 ஆம் ஆண்டு முதல் திரையில் தோன்றி பல்லாயிரக்கணக்கான ரசிர்களை தனது நடிப்பாற்றலினால் கவர்ந்த ஷாருக்கான் (வயது 53) பொலிவூட் அரசன் என்று அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
