ஆஸ்திரேலியாவுக்கான புதிய தற்காலிக பெற்றோர் விசா ஒன்று அடுத்தவருட முற்பகுதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2016ம் ஆண்டு முன்மொழியப்பட்ட இவ்விசாவுடன் தொடர்புபட்ட சட்டமுன்வடிவுக்கு நேற்றையதினம் நாடாளுமன்ற அனுமதி கிடைத்ததையடுத்து இப்புதிய தற்காலிக விசா அடுத்த வருடம் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதன்படி ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்கள் தமது பெற்றோரை 3 வருட தற்காலிக விசாவில் வரவழைப்பதற்கு 5000 டொலர்களைச் செலுத்த வேண்டும். அதேபோன்று 5 வருட விசாவுக்கு 10,000 டொலர்கள் செலுத்த வேண்டும். மேலதிகமாக 10,000 டொலர்கள் செலுத்துவதன் மூலம் மேலும் 5 வருடங்களால் இந்த விசாவை நீடித்துக்கொள்ள முடியும். ஆனால் அவர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாகக் குடியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேலும் Medicare உட்பட அரசின் எந்தவொரு நலன்புரி சேவைகளும் தற்காலிக பெற்றோர் விசாவில் வருபவர்களுக்கு வழங்கப்படமாட்டாது. இந்த விசாவில் வருபவர்கள் தனியார் மருத்துவக் காப்பீடு பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஆஸ்திரேலியாவில் அவர்களுக்கு ஏற்படுகின்ற எந்தவொரு கூடுதல் சுகாதார செலவினங்களுக்கும் அவர்களது பிள்ளைகள் நிதி உத்தரவாதம் அளிக்கவேண்டும்.
அதேநேரம் குறித்த விசாவுக்கு விண்ணப்பிப்பவர் தொடர்பில் குடிவரவுத் திணைக்களம் மதிப்பீடொன்றை மேற்கொண்டு அதற்கான அனுமதி கிடைத்த பின்னரே பெற்றோரை வவைழைப்பதற்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய முடியும்.
இந்த விசாவூடாக நிரந்தர வதிவிடம் பெறமுடியாமை மற்றும் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளமை போன்றன கவலை தரும் விடயங்கள் என புலம்பெயர் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தற்காலிக பெற்றோர் விசாவில் அரசு சில மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எதிர்கட்சியான லேபர் கட்சி தெரிவித்துள்ளது.
குறிப்பாக வீடொன்றில் தம்பதியர் தமது பெற்றோரை ஒரேதடவையில் வரவழைக்க முடியாது, அதாவது கணவனுடைய பெற்றோர் அல்லது மனைவியுடைய பெற்றோருக்கு மாத்திரமே ஒரு தடவையில் விண்ணப்பிக்க முடியும் என்ற நிபந்தனை மற்றும் பெற்றோருக்கான திடீர் சுகாதார செலவினங்களை பிள்ளைகளிடமிருந்து வலுக்கட்டாயமாக அறவிடும் செயற்பாடு போன்றவை அரசினால் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் எனத் தெரிவித்துள்ள லேபர் கட்சி, அரசு இத்திட்டத்ததை என்ன வடிவில் அறிவித்தததோ அதேவடிவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.