தேசிய மன்னிப்பு தினம்

20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கைகள் பூர்வீக மக்களின சிறுவர்களையும் குழந்தைகளையும் பெற்றோரிடமிருந்து பிரித்துவிட வழி செய்தது. அந்த சிறுவர்களும் குழந்தைகளும் திருடப்பட்ட தலைமுறையினர் என்று அறியப்படுகிறார்கள். அவர்களை நினைவு கூரவும் பூர்வீக மக்கள் தவறாக நடத்தப்பட்டதை உணர்த்தவும், 1998 ஆம் ஆண்டு முதல் மே 26ம் நாள் தேசிய மன்னிப்பு தினமாக அவதானிக்கப்படுகிறது.

National Sorry Day

National Sorry Day-Filesize Source: SBS Your language

அவர்களது வீட்டுக்குத் திரும்பவைப்போம் (Bringing Them Home) என்ற அறிக்கை, 1997ம் ஆண்டு மே 26ம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.  திருடப்பட்ட தலைமுறைகளுக்கும் பூர்வீக மற்றும் டோர்ரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு சமூகங்களுக்கும் மற்றைய ஆஸ்திரேலியர்கள் மத்தியிலும் மே 26ம் நாளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பெருகிக் கொண்டு வருகிறது.

தேசிய மன்னிப்பு தினத்தின் பின்னணி

நில இழப்பு மற்றும் தவறான முறையில் நடத்தப்பட்டமை குறித்து, பூர்வீக மக்களின் எதிர்ப்பு நாள் 1938 இல் உருவானது.

1997ம் ஆண்டு மே 26ம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட, "அவர்களது வீட்டுக்குத் திரும்பவைப்போம்" (Bringing Them Home) என்ற அறிக்கையில் திருடப்பட்ட தலைமுறையினரிடம் ஆஸ்திரேலிய அரசு மன்னிப்புக் கோர வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.  ஆனால், வரலாற்றில் பின்னோக்கிப் பார்த்து தான் செயற்பட மாட்டேன் என்றும், மன்னிப்புக் கூற முடியாது என்றும், அப்போதைய பிரதமர் ஜோன் ஹோவர்ட் (John Howard) மறுத்துவிட்டார்.

பிரதமர் ஜான் ஹோவர்ட், 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று, கடந்த காலத் தலைமுறையினரின் பழக்கவழக்கங்களின் கீழ் பூர்வீக மக்கள் அநியாயங்களை அனுபவித்தமைக்கு ஆழமான மற்றும் நேர்மையான வருத்தத்தை வெளிப்படுத்தினார்.  அப்போது எதிர்க்கட்சித் தலைவரான கிம் பீஸ்லே (Kim Beazley) ஜான் ஹோவார்ட்டின் வருத்தத்தை நிராகரித்து, பாரபட்சமில்லாத மன்னிப்புக் கோர வேண்டும் என்று முன்மொழிந்தார், ஆனால் அது நாடாளுமன்றத்தில் வெற்றி பெறவில்லை.

அதன் விளைவாக, அரசியல் அங்கீகாரம் இல்லாத நிலையிலும் "மன்னிப்பு தினம்" என்ற கருத்து பரவலாக்கப்பட்டது.  "தேசிய மன்னிப்பு தினம்" என்று கொண்டாடுவதற்கும் பிரபலமான இயக்கம் உருவானது.

National Sorry Day
National Sorry Day

அரசியல்வாதிகள், பொது மக்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இடையே பலாத்காரமாக சிறுவர்கள் அகற்றப்பட்டது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குடும்பங்கள் மற்றும் பூர்வீக சமூகங்கள் மீதான அதன் தாக்கத்தைப் பரந்த பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் இந்நாள் வருடாந்தர நினைவு நாளாக அவதானிக்கப்படுகிறது.

2008ம் ஆண்டு பிப்ரவரி 13ம் நாள், அன்றைய பிரதமர் கெவின் ரட் (Kevin Rudd) "திருடப்பட்ட தலைமுறை" க்கு நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார்.   முதன் முறையாக ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் சார்பில் மன்னிப்புக் கோரிய சம்பவம் இதுவேயாகும்.

 

 

 


2 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now