ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மனுஸ் - நவுறு தீவுகளிலுள்ள சுமார் நூறு அகதிகள் கனடாவுக்கு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகிவிட்டன என்றும் கோவிட் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் அவர்கள் அங்கு பயணமாகவுள்ளார்கள் என்றும் The Guardian செய்தி வெளியிட்டுள்ளது.
கனடா ஒவ்வொரு வருடமும் தனது நாட்டிலுள்ள தனிநபர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஸ்பொன்ஸர் செய்யும் குறிப்பிட்ட எண்ணிக்கையான தஞ்சக்கோரிக்கையாளர்களை ஏற்றுக்கொண்டு விசா வழங்கும் நடைமுறையை பின்பற்றி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்து நாட்டுக்குள் அனுமதிக்கப்படாமல் கடந்த பல வருடங்களாக மனுஸ் - நவுறு தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளை, மேற்படி கனடா விசாவின் கீழ் கனடாவில் குடியமர்த்துவதற்கு ஆஸ்திரேலியாவிலும் கனடாவிலும் உள்ள தொண்டு அமைப்புக்கள் கடந்த சில வருடங்களாக முனைப்புடன் செயற்பட்டுவந்தன.
கனடாவுக்குள் அனுமதிக்கப்படும் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கான ஸ்பொன்ஸர் பணம், தங்குமிடம் மற்றும் பொறுப்பு நிற்கும் தரப்புக்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கான முயற்சிகளை இந்த அமைப்புக்கள் தீவிரமாக மேற்கொண்டுவந்தன.
இதற்கு ஆஸ்திரேலிய அகதிகள் நலஅமைப்பொன்று சுமார் 20 லட்சம் ஆஸ்திரேலிய டொலர்களை திரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்படி விசாவின் கீழ், மனுஸ் - நவுறு தீவுகளிலிருந்து கனடாவுக்கு இதுவரை பதினொரு ஆஸ்திரேலிய அகதிகள் சென்றிருக்கிறார்கள். இன்னும் நூறு பேரளவில் போவதற்கான சகல ஏற்பாடுகளும் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது.
கோவிட் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன் இவர்களது மீள்குடியேற்றம் கனடாவில் சாத்தியமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதேவகையிலான விசா பிரிவின் கீழ் பிரான்ஸ், நோர்வே, பின்லாந்து ஆகிய நாடுகளும் தங்களது நாட்டுக்குள் வருவதற்கு தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கினாலும், அதி அவசரமான சூழ்நிலையிலுள்ளவர்களுக்கு மாத்திரமே, இந்த விசாவை அவை வழங்குகின்றன. அதேவேளை, மிகக்குறைவான எண்ணிக்கையில்தான் இந்த விசா ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகிறது.
இந்த நாடுகளுக்கான விசாவுக்கு தகுதியுடைய அகதிகளை தெரிவுசெய்து, அங்கு அனுப்புவதற்கும் மீள்குடியேற்ற விவகாரத்தில் இணைந்து செயற்படும் தொண்டு நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.