பசுபிக் தீவுகளைச் சேர்ந்த 18 நாடுகளின் தலைவர்கள் மாநாடு அடுத்தவாரம் நவுறுவில் ஆரம்பமாகும் நிலையில், நவுறு தடுப்பு முகாமை மூடுமாறு இம்மாநாட்டில் வலியுறுத்த வேண்டும் என தொண்டு அமைப்புகள் கோரியுள்ளன.
குறித்த மாநாடு எதிர்வரும் 3ம் திகதி முதல் 6ம் திகதி வரை நடைபெறவுள்ளநிலையில், இதில் பங்கேற்கும் 18 நாடுகளின் தலைவர்களும் ஆஸ்திரேலிய அரசால் நிர்வகிக்கப்படும் நவுறு தடுப்பு முகாமை நிரந்தரமாக மூடுவதற்கான அழுத்தங்களை வழங்க வேண்டும் என Amnesty International-சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட 80 அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.
நவுறு தடுப்பு முகாமில் மட்டும் சிறுவர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக Refugee Council of Australia தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் நவுறு தடுப்பு முகாமை ''Australia's Guantanamo" என வர்ணித்துள்ள தொண்டு அமைப்புக்கள், அங்கு வாழும் அனைவரும் மிக மோசமான நிலையில் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளன.
இதேவேளை திங்கட்கிழமை ஆரம்பமாகும் மாநாடு தொடர்பில் செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்கள், நவுறு தடுப்பு முகாம் மற்றும் அங்குள்ள அகதிகள் தொடர்பில் செய்தி சேகரிக்க முடியாதவாறு நவுறு அரசு தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
