நவுறு மற்றும் மனுஸ் தீவில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுவதுடன் அங்குள்ள முகாம்களை மூடவேண்டுமென ஐ.நாவின் அகதிகளுக்கான அமைப்பான UNHCR தெரிவித்துள்ளது.
நவுறுவிலுள்ளவர்களுக்கு உளவள உதவிகளை வழங்கிவந்த Doctors Without Boarders ஊழியர்கள் கடந்த புதன்கிழமையுடன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளநிலையில், நவுறுவிலுள்ள பலரின் நிலை இன்னமும் மோசமடையும் என கன்பராவிலுள்ள UNHCR அமைப்பின் பேச்சாளர் Catherine Stubberfield தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மட்டும் நறுவிலுள்ள 78 அகதிகள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக்கொள்ள முயன்றிருந்தநிலையில் அங்குள்ளவர்களை ஆற்றுப்படுத்துவதற்கான செயற்பாடுகளும் இல்லாவிட்டால் நிலைமை மிகமோசமடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கடந்த 2014ம் ஆண்டு முதல் நவுறு மற்றும் மனுஸிலிருந்த 12 பேர் மரணமடைந்துள்ளமையையும் சுட்டிக்காட்டியுள்ள Catherine Stubberfield, ஆஸ்திரேலிய அரசு அங்குள்ளவர்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாணவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை அகதிகளை ஏற்றுக்கொள்ளத்தயார் என்ற நியூசிலாந்து அரசின் அழைப்பை ஏற்று அகதிகளை அங்கு குடியமர்த்தும் செயற்பாட்டினை ஆஸ்திரேலியா ஆரம்பிக்கலாம் எனவும் Catherine Stubberfield தெரிவித்துள்ளார்.
