நவுறு அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் சுமார் மூன்று தடவைகளுக்கும் மேல் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக்கூறப்படும் 10 வயதுச்சிறுவனுக்கு நீதி பெற்றுக்கொடுப்பதற்காக ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இடம்பெற்றதாகக்கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக நவுறு பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டபோதும் அந்த முறைப்பாடு தொடர்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததையடுத்து அவனுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு நீதி வேண்டி ஆஸ்திரேலிய அரசுக்கெதிராக தற்போது ஆஸ்திரேலியாவில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு படகு மூலம் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு வந்து அங்கிருந்து உடனடியாக நவுறுக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கு தடுத்துவைக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட பின்னர், தற்போது சிட்னியில் வசித்துவரும் பாதிக்கப்பட்ட இந்த ஈரானிய சிறுவனுக்கு ஏற்பட்ட கொடூரமான சம்பவத்தினால் அவன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாவும் அவனது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவனது தரப்பில் வழக்கு தாக்கல் செய்துள்ள சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ள சட்ட நிறுவனம் இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போது - தடுப்புமுகாமில் தங்கள் மீது பாலியல் தாக்குதல் நடைபெற்றதாக கூறும் அகதிகளின் பல வழக்குகளுடன் வேலை செய்துவருகின்றபோதும் சிறுவன் ஒருவனுக்கு எதிராக இவ்வாறானதொரு வன்கொடுமை இடம்பெற்றிருப்பதாக முறையிடப்பட்டிருப்பது இதுவே முதல் தடவை என்று கூறியுள்ளனர்.
Share
