நவுறு தீவிலிருந்து பல அகதிகளை ஆஸ்திரேலிய அரசாங்கம் இரகசியமாக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவந்திருப்பதாக Fairfax Media செய்தி வெளியிட்டுள்ளது.
அகதிகள் தொடர்பான பிரச்சினையால் உள்நாட்டில் மாத்திரமல்லாது வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துவரும் ஆளும் Morrison அரசு இந்த தொடர் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த இரகசிய நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக அறியமுடிகிறது.
நவுறு தீவிலிருந்து நானூறுக்கும் மேற்பட்ட அகதிகள் ஏற்கனவே அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். நவுறு தீவில் ஏராளமான அகதிகள் தடுப்பு முகாமிலும் வெளியிலும் உள்ளார்கள். இவர்களை நியூஸிலாந்து அரசு ஏற்றுக்கொள்வதாக தொடர்ந்து சம்மதம் தெரிவித்துவருகின்றபோதும் அதனை ஆஸ்திரேலிய அரசு மறுத்துவருகிறது.
இதனை அடுத்து, முக்கியமாக சிறுவர்கள் - குழந்தைகளோடுள்ள குடும்பங்களை முதற்கட்டமாக இரகசியமாக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறித்து அரசு எந்த விவரமும் தெரிவிக்கவில்லை. ஆனால், அகதிகள் நல அமைப்புக்கள் வெளியிட்டுளள் தகவல்களின்படி, பதினைந்து பேர் சில குடும்பங்களுடன் அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இன்னும் சில குடும்பங்கள் இந்த வாரம் கொண்டுவரப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
