அமெரிக்கா- ஆஸ்திரேலியா இடையே செய்துகொள்ளப்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின்படி, நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலுள்ள மற்றுமொரு தொகுதி அகதிகள் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
நவுறுவிலிருந்து புறப்பட்டுள்ள 19 பேரில் அங்கு வாழ்ந்துவந்த கடைசி 4 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் மனுஸிலிருந்து 22 ஆண்கள் அமெரிக்கா புறப்பட்டுச்சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்கா- ஆஸ்திரேலியா இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்கீழ் 1200 அகதிகளை ஏற்றுக்கொள்ளவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருந்தபோதிலும், இதுவரை கிட்டத்தட்ட 500 அகதிகள் மாத்திரமே அங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த வேகத்தில் சென்றால் ஏனையவர்களை அங்கு குடியமர்த்துவதற்கு இன்னும் 4 ஆண்டுகள் செல்லுமென அகதிகள் செயற்பாட்டாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை நவுறுவிலிருந்து தமது குடும்பத்துடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றவர்களில் சிலர் தமக்கான விமானப்பயணச் செலவினை அங்கு குடியேறி நான்கு ஆண்டுகளுக்குள் அமெரிக்க அரசுக்குச் செலுத்தவேண்டுமெனவும், இதன்படி ஒரு குடும்பம் 12 ஆயிரம் டொலர்கள் வரை கடனாளியாக இருப்பதாகவும் Ads-Up என்ற அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
