வாகனம் ஓட்டும்போது கைபேசியை பயன்படுத்துபவர்களை படமெடுக்கும் கமராக்கள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இன்று முதலாம் திகதி முதல் தங்களது கடமைகளை ஆரம்பிக்கின்றன.
இவ்வாறு கைபேசிகளை பயன்படுத்தும்போதும் படமெடுக்கப்படுபவர்கள் முதல் மூன்று மாதங்களுக்கு எழுத்து மூலம் எச்சரிக்கப்படுவார்கள்.
மார்ச் மாதம் முதல் குற்றவாளிகளாக ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்படுபவர்களுக்கு தண்டப்பணம் அறவிடப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில போக்குவரத்து அமைச்சர் Andrew Constance அறிவித்துள்ளார்.
இன்று முதல் இவ்வாறு கைபேசி பாவிக்கும் சாரதிகளை படமெடுப்பதற்கு நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் 45 இடங்களில் கமராக்கள் தங்களது கடமையை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாநில சட்டதின் பிரகாரம், வாகனம் ஓட்டும்போது கைபேசிகளை பயன்படுத்துபவர்கள் பிடிக்கப்பட்டால், அவர்களுக்கு 5 demerit points-குற்றப்புள்ளிகளும் 344 டொலர்களும் அறவிடப்படும். இந்தக்குற்றம் பாடசாலை அமைந்துள்ள பிரதேசத்தில் இடம்பெற்றால், தண்டப்பணம் 457 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் உயிரோடிருந்த 329 பேரை இந்த வருடம் இழந்திருக்கிறோம் என்றால் அதற்கு வீதிவிபத்துக்கள்தான் காரணம். ஆக, வீதிப்பாதுகாப்பு சட்டங்களை தொடர்ந்தும் இறுக்கமாக்குவது இன்றியமையாதது என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில போக்குவரத்து அமைச்சர் Andrew Constance கூறியுள்ளார்.
