காட்டுத்தீ பேரிடர் முகாமைத்துவம் மற்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் Bridget McKenzie-இன் நிதி ஒதுக்கீடு விவகாரம் போன்ற காரணிகளால் ஆளும் லிபரல் கூட்டணிக்கான மக்கள் ஆதரவில் தொடர்ந்தும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக The Australian நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவித்திருக்கிறது.
கடந்தமாதம் வெளியான கருத்துக்கணிப்பில் லிபரல் கூட்டணி மீதான மக்கள் ஆதரவு சரிந்து லேபர் கட்சிக்கான ஆதரவு கூடியிருந்த பின்னணியில், தற்போது வெளியாகிய கருத்துக்கணிப்பிலும் இருகட்சி விருப்பு அடிப்படையில் 52-48 என்ற விகிதத்தில் லேபர் கட்சி தொடர்ந்தும் முன்னிலை பெற்றுள்ளது.
சுமார் 1510 வாக்காளர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பிலிருந்து இந்த முடிவு பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.
கடந்த கருத்துக்கணிப்பில், பிரதமர் ஸ்கொட் மொறிஸனுக்கான மக்கள் ஆதரவு 45 புள்ளியிலிருந்து 37 என்ற நிலைக்கு வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் புதிய கருத்துக்கணிப்பிலும் இவருக்கான மக்கள் ஆதரவு 37 வீதமாக காணப்படுகிறது.
அதேநேரம் எதிர்க்கட்சித்தலைவர் மீதான மக்கள் ஆதரவு 46 புள்ளியிலிருந்து 43-ஆக குறைவடைந்துள்ளது.
இருப்பினும் மக்களின் விருப்பத்துக்குரிய பிரதமர் யார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 43 - 38 என்ற விகிதத்தில் ஸ்கொட் மொறிஸனைப் பின்தள்ளி எதிர்க்கட்சித்தலைவர் Anthony Albanese தொடர்ந்தும் முன்னிலை பெற்றுள்ளார்.
காட்டுத்தீ பேரிடர் முகாமைத்துவத்தில் ஸ்கொட் மொறிஸன் தலைமையிலான அரசு காண்பித்த மிக மோசமான அணுகுமுறையும், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் Bridget McKenzie கடந்த தேர்தலுக்கு முன்பு விளையாட்டு அமைப்புக்களுக்கு நிதிஒதுக்கீடு செய்ததில் பாரபட்சமாக நடந்துகொண்டார் என்ற விவகாரமுமே கூட்டணி அரசின் வீழ்ச்சிக்கு காரணம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
