காட்டுத்தீ பேரிடர் நாட்டில் பேரழிவையும் பேரதிர்ச்சியையும் கொடுத்திருக்கும் அதேவேளை ஆளும் லிபரல் கூட்டணிக்கான மக்கள் ஆதரவிலும் பெரும் பின்னடைவை கொடுத்திருக்கிறது.
ஆட்சிக்கு வந்த பின்னர் முதல் தடவையாக லிபரல் கூட்டணி மீதான மக்கள் ஆதரவு சரிந்து லேபர் கட்சிக்கான ஆதரவு கூடியிருப்பதாக The Australian நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவித்திருக்கிறது.
கடந்த டிசெம்பர் The Australian ஊடகம் நடத்திய கருத்துக்கணிப்பின்போது இருகட்சி விருப்பு அடிப்படையில் 52-48 என்ற விகிதத்தில் முன்னணியிலிருந்த லிபரல் கட்சிக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்து, தற்போது லேபர் கட்சி 51 - 49 என்ற விகிதத்தில் முன்னிலை பெற்றுள்ளது.
புதுவருடத்தில் 8-11ம் திகதிக்கு இடையில் சுமார் 1505 வாக்காளர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பிலிருந்து இந்த முடிவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இந்தக்கருத்துக்கணிப்பில் முக்கியமாக, பிரதமர் ஸ்கொட் மொறிஸனுக்கான மக்கள் ஆதரவு 45 புள்ளியிருந்து 37 என்ற நிலைக்கு படு வீழ்ச்சியடைய எதிர்க்கட்சித்தலைவர் மீதான மக்கள் ஆதரவு 40 புள்ளியிலிருந்து 46 என்ற நிலைக்கு எழுச்சி கண்டுள்ளது.
மக்களின் விருப்பத்துக்குரிய பிரதமர் யார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 43 - 39 என்ற விகிதத்தில் ஸ்கொட் மொறிஸனைப் பின்தள்ளி எதிர்க்கட்சித்தலைவர் Anthony Albanese முன்னிலை பெற்றுள்ளார்.
பேரிடர் முகாமைத்துவத்தில் ஸ்கொட் மொறிஸன் தலைமையிலான அரசு காண்பித்த மிக மோசமான அணுகுமுறைதான், லிபரல்கள் மீதான அதிருப்திக்கு காரணம் என்றும் மக்களின் பேராதரவை பெற்று உச்சத்திலிருந்த லிபரல் கூட்டணியை எட்டு மாதங்களில் ஒரு காட்டுத்தீ எரித்து கீழே வீழ்த்தியிருக்கிறது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
