பிரபல எழுத்தாளர் Ian Fleming உருவாக்கிய கதாபாத்திரமான James Bond திரைப்பட வரிசையில் Sean Connery நடித்த முதல் திரைப்படமான Dr. No, 60 வருடங்களுக்கு முன்னர் அந்த தலைமுறையினரிடம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பையும் பரபரப்பையும், சில தினங்களுக்கு முன் வெளியான No Time to Die யும் ஏற்படுத்தியிருப்பது, James Bond என்ற brand மீது இளைய மற்றும் மூத்த தலைமுறையினரின் தீராத காதலையும் ஆறாத மோகத்தையும் பிரதிபலிப்பதாக இருக்கிறது.
ஒரு பொருளை வாங்கும்போது minimum guarantee - குறைந்த பட்ச உத்தரவாதம் என்ற ஒன்று உண்டு. அதேபோல Bond திரைப்படங்களிலும் இந்த உத்தரவாதம் உண்டு. அறிவியல்ரீதியான கதைக்கரு,தொய்வில்லாத திரைக்கதை, அதிரடி action, அழகான பெண்கள், வித்தியாசமான வில்லன், விறுவிறுப்பான ஒளிப்பதிவு, காட்சிகளின் பிரமாண்டத்தை மேலும் பிரமாண்டமாக்கும் ஒலியமைப்பு- BGM மற்றும் sound effects என்ற minimum guarantee எல்லா James Bond படங்களுக்கும் உண்டு. இம்முறையும் James Bond, ரசிகர்களை ஏமாற்றவில்லை.
இதுவரை 7 பேர் James Bond ஆக நடித்துவிட்டார்கள். கடந்த ஐந்து படங்களில் நடித்த Daniel Craig தான் No time to die இலும் நடித்திருக்கிறார். இது இவர் கடைசியாக நடிக்கும் James Bond படம் என்பதைத்தவிரவும் இதுவரைவந்த James Bond படங்களில் இல்லாத மூன்று சிறப்பம்சங்கள் இந்த திரைப்படத்திலுண்டு. அது என்ன என்று பின்னர் பார்ப்போம்.

முதலில் கதை என்ன என்று சுருக்கமாகப்பார்ப்போம்.
இதற்கு முன்னர் வந்த Spectre படத்தின் தொடர்ச்சியாக No Time To Die படத்தின் கதை அமைந்தாலும் Spectre ஐப் பார்க்காதவர்கள் கவலை கொள்ளத்தேவையில்லை. கதையில் பின்னர் வரும் உரையாடல்கள் Spectre இன் பிரதான கதைக்கருவைத்தொட்டுச்செல்கிறது.
நேரடியான தனது பொறுப்புகளில் இருந்து விடுபட்டு, Jamaica தீவின் ரம்மியமான சூழலில் பொழுதை கழித்துவரும் James Bond இன் நிர்ச்சலனமான நாளாந்த வாழ்க்கைக்குள் நுழைகிறார் அவரது பழைய நண்பர் Felix. Felix ஒரு CIA agent. Felix ஒரு உதவி கேட்டு அவரிடம் வருகிறார். ‘மர்ம வில்லனால் கடத்தப்பட்ட ஒரு விஞ்ஞானியை மீட்டெடுப்பதற்கு James Bond உதவ வேண்டும்’ என்பதுதான் கோரிக்கை.
கடத்தப்பட்ட விஞ்ஞானியின் துணையோடு மிக மிக புதிய தொழில் நுட்பம் ஒன்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஒரு biological weapon -உயிரியல் ஆயுதத்தின் மூலமாக கற்பனைக்கும் எட்டாதவகையில் அழிவுகளை வில்லன் Rami Malek ஏற்படுத்துகிறான். இந்த உயிரியல் ஆயுதம் எப்படிப்பட்டது என்று பாரத்தால் எதிரியின் DNA வைக்குறிவைத்து தயாரிக்கப்படுவது. வேறு யாருக்கும் கெடுதல் செய்யாது. ஒரு அறையில் பத்துப்பேர் இருந்தாலும் யாருடைய DNA வைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறதோ அவரை மட்டும் கொல்லும். இந்த பயங்கர ஆயுதத்தை James Bond அழித்தாரா? கடத்தப்பட்ட விஞ்ஞானியை மீட்டாரா? வில்லனுக்கு என்ன நடந்தது? என்று கதை விரிகிறது.
Action காட்சிகளில் ஏற்படும் பிரமிப்பு , நுணுக்கமான காட்சியமைப்பு, கலக்கத்தை ஏற்படுத்தும் திருப்பங்கள், கதை பயணிக்கும் Jamaica, Cuba, இத்தாலி, ஆகிய நாடுகளில் தேர்வுசெய்யப்பட்டுள்ள locations மற்றும் Secret Intelligence Service M16 அதிகாரிகள், சக 007 agent கள், CIA agent கள் ஆகிய பாத்திரங்களுக்கான தேர்வு என்பனவும் அவர்களது பங்களிப்பும் படத்திற்கு வலு சேர்க்கின்றன.
Bond இன் காதலி Madeleine ( Lea Seydoux), சக 007 Nomi, ( Lashana Lynch) )இளம் CIA agent Palma (Ana de Armas) ஆகியோர் இரும்பு மனிதன் Bond ஐச் சுற்றிச்சுழலும் பெண்களாக தமது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
இவர்களுள் கதையில் பத்தே நிமிடங்களுக்கு இளம் CIA agent ஆகவந்து James Bond உடன் இணைந்து எதிரிகளுடன் மோதும் Ana de Armas…. முழு திரைப்படத்தையும் திருடிச்செல்கிறார். இவர்தான் அடுத்த பெண் James Bond என்று விமர்சகர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள்.
இனி முன்பு சொன்ன, Bond character ஐப் பொறுத்த அளவில் புதுமை என்று சொல்லக்கூடிய மூன்று அம்சங்கள் என்ன என்று பார்ப்போம்.
James Bond ஐ எஃகினாலான உடலமைப்பு, நிதானமான கணிப்பு, சாமர்த்தியமான அணுகுமுறை, பயமற்ற எதிர்தாக்குதல், உணர்ச்சிகளுக்கு இடம்கொடுக்காத கற்பாறை மனசு எனபவை கொண்டவராகத்தான் இது வரை பாரத்திருக்கிறாம் . ஆனால் இந்தப்படத்தில் அவர் உணர்ச்சிவசப்படுபவராகவும் காதல், பிரிவு, பாசம் என்பவற்றுக்கிடையே சிக்கித்தவிப்பவராகவும் வருகிறார் என்பது முதலாவது அம்சம்.
James Bond இற்கு தனது காதலி Madeleine(Lea Seydoux) வழியாக ஒரு மகள் இருக்கிறாள் என்பது இரண்டாவது அம்சம். இந்தக் குழந்தையை விட்டு அவர் பிரியும்போது அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிப்பிரவாகம் Bond கதாபாத்திரங்களில் பார்க்கமுடியாத அபூர்வமான ஒன்று.
மூன்றாவது???
James Bond இடம் பிறரைக்கொல்வதற்கு ‘லைசன்ஸ்’ இருக்கிறது. ‘License to kill ‘. ஆனால் அவரை யாராலும் கொல்லமுடியாது. இதுதான் நமக்குத்தெரியும். ஆனால் இந்தத் திரைப்படத்தின் முடிவு யாரும் எதிர்பாராத மூன்றாவது அம்சம்.
காதலி Madeline இன் DNA வைக் குறிவைத்து தயாரிக்கப்பட்ட உயிரியல் திரவம் James Bond இன் உடலில் இருப்பதால் தனது காதலியையோ அவரது குழந்தையையோ அவர் தொடக்கூட முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்படுவதும் வில்லனின் ஆய்வகத்தைத் தரைமட்டமாக்க அனுப்பப்படும் ஏவுகணைகளுக்கு James Bond இரையாவதும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியைத்தரும் முடிவாகும்.
Director Cary Joji Fukunaga வினதும் அவரது குழுவினரதும் கடும் உழைப்பு இந்த படம் முழுவதும் விரவிக்கிடக்கிறது. பிரதானமாக action காட்சிகளின் வியூகம், படமாக்கல் என்பன இதுவரை வந்த எல்லா bond படங்களையும் விஞ்சி நிற்கின்றன.
ஒன்றரை மணித்தியால ஆங்கிலப்படங்களுக்குப்பழகிவிட்ட பலருக்கு சுமார் 3 மணித்தியால திரைப்படமான No Time to Die பொறுமையைச் சோதிக்கக் கூடும் என்றபோதும், இந்த மூன்று மணித்தியாலங்களை ஆசனத்தின் விளிம்பில் அமரவைத்து அயர்ச்சியில்லாமல், கண்முன் விரியும் காட்சிகளிலும் action-களிலும் கட்டிப்போட்டுவிடுகிறது ‘சாவதற்கு நேரமில்லை’- No Time to Die.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
