SKIP TO MAIN CONTENT

பிரியா குடும்பம் எழுத்துமூல உத்தரவின்றி கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தகவல்!

Nadesalingam, Priya and their Australian-born children Kopika, 4, and Tharunicaa, 2. Peter Dutton is under fire for his "anchor baby" reference.
Nadesalingam, Priya and their Australian-born children Kopika, 4, and Tharunicaa, 2 & Peter Dutton Source: AAP

2 min read

Published

Updated


Skip to article content

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழ் குடும்பத்தை கிறிஸ்மஸ்தீவில் தடுத்து வைப்பது என்ற தீர்மானத்தை உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் எந்தவித எழுத்துமூலமான உத்தரவுமின்றி வெறுமனே வாய்வார்த்தை அடிப்படையில் மேற்கொண்டிருந்ததாக The Gardian செய்திவெளியிட்டுள்ளது.

பிரியா-நடேஸ் குடும்பத்தை கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பிவைக்குமாறு எழுத்துமூல உத்தரவெதுவும் எல்லைப் பாதுகாப்பு ஆணையரால் வழங்கப்பட்டிருக்கவில்லை எனவும், இது குறித்த ஆவணத்தை வெளியிடுமாறு உள்துறை அமைச்சிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள் முதலில் நிராகரிக்கப்பட்டதாகவும் The Gardian தெரிவித்துள்ளது.

எனினும் பின்னர் தமக்கு வழங்கப்பட்ட பதிலில், எல்லைப் பாதுகாப்பு ஆணையர் Michael Outram, உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கு வாய்மொழி மூலம் இந்த உத்தரவை வழங்கினார் என்று கூறப்பட்டதாக The Gardian குறிப்பிட்டுள்ளது.

அதன்பின்னர் ஒரு வாரம் கழித்து இதை உறுதிப்படுத்தும்விதமாக Michael Outram கடிதம் ஒன்றை உள்துறை அமைச்சுக்கு அனுப்பியிருந்தார் எனவும், இதுகுறித்த ஆவணம் வேறொரு சந்தர்ப்பத்தில் லேபர் கட்சியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களான பிரியா - நடேஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு மகள்கள் கோபிகா மற்றும் தருணிகா ஆகியோர் சுமார் ஒன்றரை வருடங்களாக மெல்பேர்னிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தும் நோக்கில் சிறப்பு விமானமொன்று அவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட போதிலும் இறுதி நேரத்தில் குழந்தை தருணிகா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் நீதிமன்றம் கடைசி நிமிட தடை உத்தரவை பிறப்பித்ததைத் தொடர்ந்து, விமானம் டார்வினில் தரையிறங்கிய போது குடும்பம் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டு, பின்னர் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து தருணிகாவின் பாதுகாப்பு குறித்தும், தருணிகாவின் சூழ்நிலைகளை உள்துறை அமைச்சர் மதிப்பீடு செய்திருக்க வேண்டுமா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், தீர்ப்புவழங்குவதற்கு கால அவகாசம் எடுத்திருந்த பின்னணியில் தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும் என செப்டம்பர் 19ம் திகதி தீர்ப்பினை வழங்கியது.

இதன்படி பிரதான விண்ணப்பதாரியான தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இவ்விசாரணை முடியும் வரை அவர் நாடுகடத்தப்படக்கூடாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.

தருணிகா குழந்தை என்பதால் அவரிடமிருந்து பெற்றோரை தனியாகப்பிரித்து நாடுகடத்தமுடியாது என்பதால் முழுக்குடும்பமும் நாடுகடத்தலிலிருந்து தப்பித்திருந்த பின்னணியில் கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமிலேயே தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நான்கு பேர் அடங்கிய இக்குடும்பம் மட்டுமே கிறிஸ்மஸ் தீவு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மக்களின் வரிப்பணம் வீண்விரயமாக்கப்படுவதாகவும் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

பிரியா-நடேஸ் குடும்பத்தின் நாடுகடத்தலுக்கெதிரான வழக்கு விசாரணை 2020 ஜனவரிக்குப் பின்னரே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now