அக்டோபர் மாத முதல்வாரத்தில் இவ்வருடம் நோபல் பரிசுபெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. வழமைபோல physiology or medicine-உடலியல் அல்லது மருத்துவம், physics-இயற்பியல் அல்லது பௌதிகவியல், chemistry- வேதியல் அல்லது இரசாயனவியல், literature-இலக்கியம், economics-பொருளியல் மற்றும் Nobel peace prize-அமைதி அல்லது சமாதானத்திற்கான நோபல் பரிசு என்பன தொடர்ச்சியாக வெவ்வேறு தினங்களில் அறிவிக்கப்பட்டன.
கடந்த சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வருடாவருடம் இந்தப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. Alfred Nobel தனது உயிலில் குறிப்பிட்டிருந்தபடி, அவரது விருப்பத்தை நிறைவுசெய்யும் விதமாக நிறுவப்பட்ட The Nobel foundation என்ற அமைப்பு, வருடாவருடம் இந்த விருதுகளைப் பெறத்தகுதியானோரைத் தெரிவுசெய்து விருதுகளை வழங்கிவருகிறது.
மருத்துவத்துறையில் மூன்று விஞ்ஞானிகளுக்கு இம்முறை விருது பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. Hepatitis என்ற நோய்பற்றி நேயர்கள் அறிந்திருப்பார்கள். Hepa என்றால் கிரேக்க மொழியில் ஈரலைக் குறிக்கும் titis என்பது வீக்கத்தைக் குறிக்கும். ஈரல் வீக்கம் என்ற நோய்க்குக் காரணம் hepatitis A மற்றும் hepatitis B என்ற வைரஸ்கள் தான் என்பது 1940 களிலேயே உறுதி செய்யப்பட்டுவிட்டது. A மாசடைந்ந தண்ணீர் மூலமாகவும், B என்பது ஒருவரது குருதி மற்றும் உடலில் இருந்து வெளியேறும் திரவங்கள் மூலமாகவும் பரவும் என்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இந்த இரண்டுவகையிலும் சேராத, விஞ்ஞானிகளால் புரிந்துகொள்ளமுடியாத மற்றொரு காரணியாலும் பலர் hepatitis நோயால் பாதிக்கப்பட்டுவந்தனர். இதற்குக் காரணம் hepatitis C என்ற வைரஸ்தான் என்பதையும் blood transfusion என்ற இரத்த மாற்று சிகிச்சையின் போது இந்த வைரஸ் உடலுக்குள் செல்லுகிறது என்பது தொடர்பாகவும் இந்த வைரஸை பிரித்தெடுத்து இனங் கண்டுகொண்டது தொடர்பாகவும், இந்த வைரஸ்தான் நோயை ஏற்படுத்துகிறது என்பதை நிறுவியதற்காகவும் Michael Houghton, Harvey J Alter மற்றும் Charles M Rice ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு இந்த வருடத்திற்கான மருத்துவ துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த C வைரஸின் கண்டுபிடிப்பு வைத்தியத்துறையில் பெருஞ்சாதனையாக கருதப்படுகிறது. இதன்காரணமாக, highly sensitive bloood tests மூலமாக இரத்தமாற்று சிகிச்சைக்கு முன்னதாக இந்த வைரஸ்கள் களையப்படும் முறை உலகில் பரவலாக பல நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இயற்பியலுக்காக யார் விருது பெறுகிறார்கள்?
Physics இயற்பியலுக்கான நோபல் விருதும் இம்முறை மூன்று பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. Oxford பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த Roger Penrose அவர்களுக்கு ஒருபகுதியும் மீதியை இரண்டாகப்பிரித்து, California பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களான Reinhard Genzel மற்றும் Andrea Ghez ஆகியோருக்கும் இப்பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

இவர்கள் மூவரும் black holes என்ற கருந்துளைகள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்கள். கருந்துளைகள் பற்றிய ஆராய்ச்சிகளை Albert Einstein செய்திருந்தபோதும் அவருக்கு அதுதொடர்பான சந்தேகங்கள் பல இருந்தன.
Einstein இன் relativity என்ற பொதுச்சார்பியல் கோட்பாட்டின் அடிப்படையில் ஆராய்சிகளை முன்னெடுத்ததற்காக Roger Penrose இற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் காலஞ்சென்ற விஞ்ஞானி Stephen Hawkins உடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Reinhard Genzel மற்றும் Andrea Ghez இருவரும் Milky Way என்ற பால்வீதி மண்டலத்தின் மையப்பகுதி குறித்து ஆய்வுசெய்து, பால்வீதி மண்டலத்தின் மையத்தில் பெரும் black hole ஒன்றுதான், இருக்கிறது என்பதை உறுதிசெய்ததற்காக இவர்களுக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது.
வேதியலுக்கான பரிசைப்பெறுவது யார்?
Chemistry வேதியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
‘எழுதிச்செல்லும் விதியின்கை எழுதி எழுதி மேற்செல்லும், அழுதாலும் தொழுதாலும் அதன் ஓரெழுத்தும் மாறாது’ என்று புகழ்பெற்ற பாரசீகப் பாடல் ஒன்று உண்டு. இதை எழுதியவர் உமர் கயாம் என்ற கவிஞர்.இல்லை, விதி எழுதியதை எம்மால் edit செய்ய -திருத்தியெழுத முடியும் என்று சவால் விடுபவர்கள்தான் - gene editing என்ற சந்ததிச்சுவடுகளை வெட்டி ஒட்டி மரபணுக்களைத் திருத்தும் விஞ்ஞானிகள். சந்ததிச்சுவட்டில் இருக்கக் கூடிய புற்றுநோய் போன்ற நோய்களை சந்ததி சந்ததியாக கொண்டு செல்லும் சுவடுகளை வெட்டி எறிந்து விட்டு, ஆரோக்கியமான சுவடுகளைப் பொருத்துவது இவர்களது வேலை. இந்த வெட்டி ஒட்டும் வேலைக்கான CRISPR /cas9 genetic scissors என்ற மரபணுக் கத்தரியைக் கண்டுபிடித்ததற்காக, ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானி Emmanuelle Charpentier மற்றும் California பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த Jennifer A Doudna என்ற இருவருக்கும் வேதியலுக்கான விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இவர்களது கண்டுபிடிப்பு காரணமாக மரபணுக்களில் திருத்தம் செய்து, நோய்க்குரிய பகுதியைக் களைவது எளிதாகியுள்ளது. புற்று நோய்க்கு எதிரான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வதிலும் மரபு ரீதியான குறைபாடுகளை நீக்குவதற்கான சிகிச்சை முறைகளுக்கும் இவர்கள் இருவரது ஆராய்ச்சிகளும் பெருமளவில் உதவியிருக்கின்றன.
இலக்கியத்திற்கான பரிசைப்பெற்றது யார்?
இவ்வருடத்திற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க கவிஞரான Louise Gluck இற்கு வழங்கப்பட்டிருக்கிறது. 77 வயதான Louise Gluck 1968 முதல் எழுதிக்கொண்டிருக்கிறார். இவரது First Born என்ற கவிதைத்தொகுப்பு 1968 இல் வெளியானது. இதுவரை 12 கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறார். Pulitzer Prize உட்பட பல உயரிய பரிசுகளை வென்றிருக்கிறார்.

காதல், இழப்பு, உறவு, துரோகம், மரணம் போன்ற தனிமனித வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் இவரது கவிதைகளின் கருப்பொருள்களாகும். ஆழமான உணர்வுகளை இவரது எழுத்துக்கள் நமக்கு எளிதாக கடத்திவிட வல்லவை.
‘For her unmistakable poetic voice that with austere beauty makes individual existence universal’ என்று நோபல் கமிட்டி அவரைப்பாராட்டியிருக்கிறது.
‘அவரது மாறுபடா கவிக்குரலும் எளிமையான கவிதை வனப்பும் தனிமனித இருப்பை உலகளாவிய நிலைக்கு உயர்த்தியுள்ளது’ என்று இந்த பாராட்டைத் தமிழ்ப் படுத்தலாம்.
பொருளாதாரத்திற்காக இவ்வருடம் விருது பெறுபவர் யார்?
Auction என்ற ஏலம் தொடர்பான கோட்பாடுகளை மேம்படுத்தியதற்காகவும் ஏலம் நடத்தப்படும் முறைகளில் மாற்றம் கொண்டுவந்ததற்காகவும் Stanford பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த Paul R Milgrom மற்றும் Robert B Wilson ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்த வருடம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

Auction என்ற ஏலம் எப்படி செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்து, ஏலம் நடத்தப்படும் முறைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்ததன் காரணமாக, மரபு ரீதியான ஏலமுறைகள் மூலமாக விற்பதற்கு சிக்கலை ஏற்படுத்தும் வானொலி அலைக்கற்றை radio frequencies தொலைத்தொடர்பு அலைக்கற்றை spectrum band எனபவை வெற்றிகரமாக ஏலம் விடப்படுவதற்கான வழிவகைகள் இவர்களது ஆய்வின் பின் பயன்பாட்டுக்கு வந்தன. இதனால் வாங்குபவர்களும் விற்பவர்களும் மற்றும் வரிசெலுத்துவோரான பொது மக்களும் பயனடைந்துள்ளனர்.
ஒரு வீட்டின் உண்மையான பெறுமதி 2 லட்சம் டாலர்கள் என்று வைத்துக் கொள்வோம் . அந்த வீட்டை விற்பதற்கான ஏலம் நடக்கும் போது சிலர் அந்த வீட்டை 2.5 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்க முற்படக்கூடும். இந்த வீட்டை வாங்க முனைப்போடு இருக்கும் ஒருவர் மூன்று லட்சம் வரை கூட போகக் கூடும். ஆனால் இந்த வீட்டின் பெறுமதி என்னவோ 2 லட்சம் தான்.
இந்த வருடம் பொருளாதாரத்திற்கான விருது பெறும் இருவரும் மிகச் சிக்கலான சேவைகள், அலைக்கற்றைகள், கனிமங்கள், energy என்ற மின் மற்றும் எரிபொருள் போன்றவற்றின் ஏலங்களின் போது common value என்ற பொதுப் பெறுமானத்தைத் தீர்மானிப்பதற்கான வழிவகைகளை உருவாக்கியிருக்கிறார்கள்.
அமைதிப்பரிசு மிகப் பிரதானமான ஒன்றாகப் பார்க்கப்படும் ஒன்று. இம்முறை யார் இதை வெல்லுகிறார்கள்?
வழமையாக அமைதிக்கான நோபல் பரிசு தனி நபருக்கு அல்லது இருவர் அல்லது மூவருக்கு பகிர்ந்தளிக்கபடும். ஆனால், இம்முறை இது ஒரு அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. WFP-World Food Programme என்ற அமைப்புக்கு இவ்வருடத்திற்கான அமைதிப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. பசியைப் போக்கவும், கலவரம் சூழ்ந்த நாடுகளில் மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தவும், போராலும் நெருக்கடிகளாலும் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் பசியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காகவும் WFP எடுத்துவரும் நடவடிக்கைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.

WFP உலகில் மிகப்பெரிய, மனிதாபிமான அடிப்படையில் இயங்கும் ஒரு அமைப்பு என்பதுடன் பசியை விரட்டவும் எல்லோருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்யவும் அது பாடுபட்டு வருகிறது.
கடந்த ஆண்டு 88 நாடுகளிலுள்ள பத்துக்கோடி மக்களுக்கு இந்த அமைப்பு உணவு வழங்கியுள்ளது, அவர்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தியுள்ளது.
போர் மற்றும் வன்முறைகள் காரணமாக பல கோடிபேர் உணவின்றி தவிக்க நேரிடுகிறது. 1962 இல் ஈரானில் ஏற்பட்ட பூகம்பம், அக்டோபரில் தாய்லாந்தில் ஏற்பட்ட புயல், அல்ஜீரியாவில் 50 லட்சத்திற்கு அதிகமான மக்கள் அகதியானமை என்பவற்றைக் கருத்தில் கொண்டு, 1963 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு அங்கமாக இந்த அமைப்பு நிறுவப்பட்டது. தற்போது covid 19 தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளிலும் பசியாற்றுவதில் இந்த அமைப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
